Welcome to KINNIYA.NET -
(கிண்ணியா).

என் பக்கம்

என் பக்கம்


Related Links:

 


Test Live Radio

 

கிண்ணியா பாயிஸா அலி

நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவள்

உயிரே உருகி ஒழுகும் ஓயாப் பணிகளையும்
கோடிமுறை ஊடறுத்துப் போகுதே.
இதயக்கிண்ணமதை நிறைத்து நுரைத்து
பொங்கி வழிந்தோடும் உன்
ஞாபக அதிர்வுகள் வரிவடிவமாகலின் வலிகள்.
இதோ… முற்றத்திலே நீ நட்ட மாமரங்கள்.
துளிர்த்துக் கிடக்குமதன் தங்கத் தளிரும்
நிலம் வீழ்ந்தே தனித்துக் கிடக்கும் சருகுகளும்
உனக்காய் பிரார்த்திக்கும் மௌன மொழிகள்
என் செவிகளுக்குள் விடாது ரீங்காரமிடுகிறது.
உச்சத்திலே பச்சைப் பவளங்களாய் பளீரிடும்
காய்கள் கொறித்தபடியே
சின்ன அணில்களும் செல்லக் கிளிகளும்
முட்டிமோதும் குருட்டு வெளவால்களும் உன்
சுவன வாசத்தை என்னிடம்
சொல்லிச் சொல்லிப் போகின்றன.
எமக்கெல்லாம் இடமின்றியே சுள்ளி விரலால்
நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவளே!
நாமென்ன கிழித்தோம்? கனி ஆய்ந்தபடியே
செறிந்த உன் வனக்கந்துகள் தறித்தே
விறகு தின்றதைத்தவிர.
தலைப்பேன் குத்தியபடி நீ சொல்லிமுடிக்கும்
பேய்க்கதைகளின் திகிலும் நீ
பருக்கி விடும் தேசிக்காய் தேனீரின் மணமும்
புளி புரளும் கூனிச் சம்பலின் ருசியும்
சொல்லில் புரிய வைக்கமுடியாத உன் சுவைகள்.
எத்தனை உறவுகள் எனைச் சுற்றிச் சூழ்ந்துமென்ன
இத்தனை வயதாகியுமே
பொங்கி வெடிக்கும் வலிகளிலும் பூரித்தெழும் சுகங்களிலும்
உன் நொய்ந்துபோன இடுப்பை இறுக்கிக் கொண்டே
சவர்க்காரமும் வெற்றிலையும் கலந்து கமழுமுன்
சேலைப் பூமடிக்குள் மீண்டும் நானொரு
சின்னக் குழந்தையாய் புதைந்திடத்தானே
மனசு கிடந்து பரபரக்குது.
நீதான் போயே விட்டாயே.
நாசித் துளைக்குள் இன்னுமுன்
நறுமணம் ஊசியாய் துளைத்து உணர்வுகளைக் குதறுகிறதே
இன்னும்
எத்தனை நாள்தான் காத்திருப்பதோ
அங்கு வந்தே உன் அணைப்புக்குள் இறுகிட.
எனக்காய் ஊட்டிட உருகிட அன்னை தந்தாய்
அன்னையூடே உன்னுதிரமுந் தந்தாய்.
இப்படியாய் எல்லாமே தந்த என்னவளே.
உன் ரோசங்களை மட்டுமெனக்குத் தந்துபோக
ஏன் மறந்தாய்?

ந்ன்றி - keetru.com

 
என் சீருடைப்பிறையே…….!
----------------------------

சீருடைப்பிறையே!
எனதில்லத்துமுற்றத்தில்
நெல்லுமணி பொறுக்கும்
சின்னச்சிட்டுக் குருவியாய்
பள்ளிநேரமதில் நீ……
சாடிகொண்ட செடிமலர்களுக்குள்ளே நெடிய
வாயுறுப்பிறக்கி அமுதமுறிஞ்சும்
வண்ணத்துப்பூச்சியே!
கண்ணாடித்தொட்டியுள் பச்சைப்புழுவாய்
வளைந்து நெளியும்
வலிஸ்நேரியப் பற்றைக்குள்
ஒளிந்து விளையாடும் பொன்மீன்குஞ்சே!
குப்பை கிளறிக்குறுணல்
கொறிக்குமென் வெண்கோழிக்குஞ்சே!
மாடத்து மினாரங்களில்
சடசடத்துப் பறக்கும் வெள்ளிப்புறாவாய்
பள்ளி மைதானமதில் படபடத்துத்திரிபவளே!
சீரூடைப்பருவமதில் நான்
சுவாசிக்கமுடியாதுபோன
சுதந்திர வானங்களுக்கான
அத்தனைசிறகுகளையும்
மொத்தமாய்விரித்திருக்கிறேன்
உன்
இலட்சியத்தேடலுக்காய்!
புரிந்துகொண்டேன்
சிரிப்பாலானவளே!
சீருடைப்பிறையே!
பேனாபிடித்த உன்
சின்ன விரலிடுக்கின்
பெருவெளிகளுக்குள்ளே
எட்டா முடிவிலித்தூரத்தில்
விரிந்து வியாபித்துக் கிடக்கின்றன
சிகரக் கனவுகள்.
எனவேதான்
இறைஇறைஞ்சலுக்காய்
இருகரமுயர்ந்திடக்
காத்திருக்கிறேனம்மா உன்
எல்லாவிதத்தேடல்களுக்குமான
அடைவுமட்டங்களுக்காய்…….!
என்
தேர்ர்ச்சித் திட்டங்களோடும்
உன்னதமான
தாய்மையின் பரிவுகளோடும்..
தசைரோபோ
--------------------

ஐயிரு பௌர்ணமிகள்
நான்விளைந்த
பையநான்
வளர சோகசுயம் மறைத்த
அமாவாசை
உதிரமதைப்
பாலாக்கி தரும்
உன்னதப்பொறி
பிஞ்சுக் கணமதிலென்
சின்ன உறுப்புகளைத்
தன் விரலால் செதிக்கிய சிற்பி
வையமிதில்
கற்கைகள் பல தொடர
கதிர் தெளித்த ஞாயிறு
சேயென்னுயர்வின்
கூனிகளை மாய்க்கச்சீறிய
சுனாமி
தன் நினைவகமதில்
தன்னலம் மட்டும் பதியமறந்த
தசைரோபோ
காப்பும் பரிவும்
பாதமதில் சுவனமுஞ் சுமந்த
சுமைதாங்கி
தன்னால் தொடமுடியாது போன
சிகரங்களுக்காய்
எனக்குள் ஏணிகள் வளர்த்த விவசாயி
தான் பறக்க நினைத்த
வானத்திற்காய்
எனக்குள் சிறகுகள்
வரைந்த தூரிகை
இல்லம் அலுவல் இரண்டிலுமேயென்
சின்னச்சின்ன் இடர்களைளயும்
இதமாய் களையும் நேர்த்திமிக்க நிர்வாகி
பரிவினாசானாயாய்
பாரினில் பவனி வரும்
அன்பின் அகராதி.