கிண்ணியாவின் முதல் மௌலவி ஆசிரியர் ஸக்கரியா ஆலிம் என எல்லோராலும் அழைக்கப்பட்ட மர்ஹூம் மௌலவி எம்.எச்.எம்.யாக்கூப் ஆலிம் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது ஹனிபா லெப்பை – பாத்தும்மா தம்பதிகளின் புதல்வராக 1924ஆம் ஆண்டு பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
 
பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் வெலிகம பாரி அறபுக்கல்லூரி, இந்தியாவின் காயல்பட்டணம் அறபுக் கல்லூரி; ஆகியவற்றில் மார்க்கக் கல்வியைக் கற்று மௌலவி பட்டம் பெற்றார்.
 
தனது 31வது வயதில் 1955ஆம் ஆண்டு மௌலவி ஆசிரியராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது மௌலவி ஆசிரியர் இவராவார். இவர் குட்டிக்கரச்சை இஹ்ஸானியா வித்தியாலயம், சம்மாவச்சதீவு அஸ்ஸபா வித்தியாலயம், மகருகிராமம் அலிகார் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில்; மௌலவி ஆசிரியராகக் கடமை புரிந்துள்ளார்.
 
தனது கற்பித்தல் காலத்தில் மாணவர்களோடும், சக ஆசிரியர்களோடும் மிக அன்பாகவும், சினேக பூர்வமாகவும் நடந்து கொண்டார். எல்லோரும் மார்க்கம் சம்பந்தமான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கூடுதலாக நல்லமல்கள் செய்வதில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
 
தப்லீக் ஜமாஅத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர் அதன் அமீராகவும் பணியாற்றி இருக்கின்றார். மார்க்கத்தை எத்தி வைத்து அதன்பால் பொதுமக்களை அழைப்பதில் தனது கனிசமான கால, நேரங்களை செலவிட்டுள்ளார்.
 
இவரை நடமாடும் மதுரசா என்று சொல்லக் கூடியளவுக்கு இவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. வீதியில் வரும் போது யாராவது பிள்ளைகளைக் கண்டால் அவர்களை அழைத்து அன்றாடம் ஓதவேண்டிய முக்கிய ஓதல்கள், தஸ்பீஹ்கள் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்பார்.
 
வீதியோரங்களில் குண்டு விளையாடும் பிள்ளைகளைக் கண்டால் மிகவும் சாதுர்யமாக அவர்களை அணுகுவார். 'உங்களுக்கும் பொழுது போகத்தானே வேண்டும். நீங்கள் விளையாடுங்கள் என்று கூறி அவர்களை தம் வசப்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு நன்மை சேரக்கூடிய விடயங்களைச் சொல்லிக் கொடுப்பார். 
 
நீங்கள் ஒவ்வொரு முறை குண்டு அடிக்கும் போதும் சுப்ஹானல்லாஹ் சொல்லிக் கொள்ளுங்கள்' என்று வலியுறுத்துவார். சில ஓதல்களை மனனமிட்டுச் சொன்னால் பரிசு தருவேன் என்று கூறி பரிசுகள் கொடுப்பார். இவரது ஜூப்பா பக்கட்டில் இனிப்பு பண்டங்கள் இருக்கும். அவற்றை சிறார்களுக்கு கொடுப்பார்.
 
யாரும் மனம் நோகும்படி பேசமாட்டார்.  சிறியவராயினும் சரி பெரியவராயினும் சரி அவர்களுடன் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்ளும் வழக்கம் அவரிடம் இருந்தது. பெரும்பாலும் கால்நடையாகவே அவரது பயணங்கள் அமைந்திருந்தன.
 
இவரது அடுத்த பக்கட்டில் கிழிந்த குர்ஆன் தாள்கள் இருக்கும். எங்காவது விழுந்து கிடந்த குர்ஆன் தாள்களைக் கண்டால் அவற்றை எடுத்து பாதுகாத்துக் கொள்வார். அவற்றில் மனனமிடக் கூடிய விடயங்கள் இருந்தால் அவற்றை பிள்ளைகளுக்கு கொடுத்து மனனமிட வைப்பார்.
  
பொதுக்கடமைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்த இவர் கிண்ணியா உலமாசபையின் முக்கிய உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகள் புரிந்துள்ளார்.
 
1979ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் நடுஊற்றுக் கிராமத்தை தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டார். 
 
வல்கூஸ் உம்மா இவரது துணைவியாவார். மர்ஹூம் உபைதுல்லா மௌலவி, பாத்தும்மா, றஹ்மத்தும்மா, பளீலா உம்மா, பதுருன்னிஸா, கைருன்னிஸா, சுல்தானியா, கன்சுல்லாஹ் (முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), தபீபா உம்மா, சவாஹிரா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
1989ஆம் ஆண்டு இவர் காலமானார். இவரது ஜனாஸா நடுஊற்று பள்ளிவாயல் காணியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 

Comment