'அண்ணல்' என்ற புனைபெயரைக் கொண்ட மர்ஹூம் எம்.எஸ்.எம். ஸாலிஹ் 1930.10.08ஆம் திகதி மர்ஹூம்களான முகம்மது சுல்தான் (கொஸ்தாப்பள்) - ஹயாத்தும்மா தம்பதிகளின் கடைசி மகனாக பெரிய கிண்ணியாவில் பிறந்தார். 
 
பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் 1953ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டதன் மூலம் ஆசிரியராக தொழில் புரிந்தார் பின்னர் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
 
தனது 15வது வயதில் இவரது முதலாவது கவிதை 'அவள்' என்ற தலைப்பில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பல கவிதைகளை இவர் எழுதத் தொடங்கினார். குறிப்பிடத்தக்க சில சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். 
 
தினபதி, சிந்தாமணி , தினகரன், வீரகேசரி உள்ளிட்ட பத்திரிகைகள் இவரது கவிதைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தன. சிந்தாமணியின் பிரதம ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் தமக்கு பெரிதும் களம் அமைத்துத் தந்ததாக கவிஞர் அண்ணல் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் ஏற்பாட்டில் 1964ஆம் ஆண்டு கிண்ணியாவில் இடம்பெற்ற முதலாவது அகில இலங்கை இஸ்லாமிய கலை, இலக்கியப் பெருவிழாவின் போது இவரது கவிதைத் தொகுப்பு அண்ணல் கவிதைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
 
இறைவணக்கம் என்ற தலைப்பு முதல் சிரிக்கின்றேன் என்ற தலைப்பு வரை 43 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதுதான் அண்ணலின் முதற்கவிதைத் தொகுப்பும் இறுதித் தொகுப்புமாகும். ஏனெனில் கவிஞர் அண்ணல் தனது 44 வது வயதில் காலமானதால் அவரது அடுத்த கவிதைத் தொகுப்புகள் வெளிவர சாத்தியங்கள் இருக்கவில்லை.
 
அண்ணல் தமிழுக் கணி செய்ய வந்தவரே திண்ணம். அவர் பாத்திரட்டு வெளிவருதல் ஈழத்தவராம் எமக்கு மிகத் தேவை என்று கவிஞர் மஹாகவி அண்ணலின் இக்கவிதைத் தொகுப்புக் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
 
இக்கவிதை நூல் கவிஞர் பீ.ரீ.அஸீஸ் அவர்களால் அண்ணல் அவர்களின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
 
தனது நட்பு வட்டத்துள் முக்கியமானவராக கலாபூஷணம் அமரர் வ.அ இராசரத்தினம் அவர்களை அண்ணல் குறிப்பிட்டுள்ளார். வ.அ. அவர்கள் அண்ணலின் அச்சேறாக கவிதைகளை ஒன்று திரட்டி நூலாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். இக்காலப்பகுதியில் தான் வ.அ இராசரத்தினம் அவர்களின் இல்லம் வன்செயல்களின் போது அழிக்கப்பட்டது. அண்ணலின் கவிதைகளும் அதற்குள் எரிந்து சாம்பலாகின.
 
கவிஞர் அண்ணல் அவர்களின் கவிதைகளைப் போல அவர் எழுதிய சிறுகதைகளும் கனதியானதாக இருந்தன.  இவர் எழுதிய 'மனிதன்' என்ற சிறுகதை பலராலும் சிலாகித்துக் பேசப்பட்டது. 1961 இல் மரகதம் சஞ்சிகையில் வெளியாகிய இக்கதையை தினகரன் மீள்பதிப்புச் செய்திருந்தது. 
 
அண்ணல் 1974இல் இறையடி எய்திய போது யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையினால் வெளியிடப்படும் யாழ்பிறையில் மறுபதிப்பாகவும் இச்சிறுகதை வெளிவந்தது. அவ்வாண்டுக்கான யாழ்பிறை ஆசிரியராக இருந்த மூதூரைச் சேர்ந்த கலாபூஷணம் எம்.எஸ்.அமானுள்ளாஹ் இந்தச் சிறுகதையை மறுபதிப்பாக வெளியிட்டார். 
 
மர்ஹூம் அண்ணலின் இலக்கியத்திறன் தென்னிந்திய கலைஞர்களின் இலக்கியத்திறனுக்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் இருந்தது. அவர் எழுதிய காதல் கவிதைகள் ஏனைய கவிஞர்களை பிரமிக்க வைத்தது. இதனால் 'காதல் கவிதைக்கோர் அண்ணல்' என்ற அடைமொழியோடு அவர் அழைக்கப்பட்டார்.
 
சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கவிஞர் அண்ணல் பள்ளிவாயல் பரிபாலன சபைத் தலைவராகவும், புகாரி சங்கத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் 'நபிகள் காவியம்' என்ற காவியத்தை எழுதினார். எனினும், காவியம் முடிவதற்கு முன்னர் அவரது இவ்வுலக வாழ்வு நிறைவு பெற்றுவிட்டது.
 
கவிஞர் அண்ணலது கவிதைகள் தேசிய மட்டத்தில் தரம் பெற்றிருந்தன. பலரும் இவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டிருந்தனர். இதனால் க.பொ.த (உயர்தர) தமிழ் பாடத்தில் இவரது 'மனிதா நீ யார்' என்ற கவிதை சேர்க்கப்பட்டிருந்தது. அதேபோல பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலும் இவரது கவிதைகள் இடம்பிடித்திருந்தன. 
 
மாலைவேளைகளில் கடற்கரைகளில் இலக்கியச் சந்திப்புகளை இவர் மேற்கொண்டு வந்தார். இவரது இலக்கியச் சந்திப்புகளில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
 
மூதூர்க் கோட்டக் கல்வி அலுவலக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் வை.அஹ்மத் அண்ணல் கவிதைகள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தார். 
 
கிண்ணியாவில் பல்வேறு வகையில் அண்ணல் இன்றும் ஞாபகப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவரது பெயரில் உருவாக்கப் பட்ட அண்ணல் நூலகம், அண்ணல் வீதி, அண்ணல்நகர் என்பவற்றோடு எம்.எஸ்.எம்.சாலிஹ் வீதி என்பன இதற்கு ஆதாரங்களாகும். 
 
கவிஞர் அண்ணல் தனது 44வது வயதில் 1974ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டும் பிரிந்தார். எனினும், இவரது இலக்கியங்கள் இன்றும் பேசப்படுகின்றன. என்றும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.            


 
 
தேடல்:
 
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment