உலகப் புகையிலை எதிர்ப்பு நாள் மே 31

ஆண்டுதோறும் மே 31 அன்று ‘உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘புகையிலை மற்றும் நுரையீரல் சுகாதாரம்’ எனும் தலைப்பில் உலக சுகாதார நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

புகைபிடித்தல் மட்டுமின்றி பான் மசாலா, குட்கா போன்ற மெல்லும் வகை புகையிலையால் ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8 லட்சமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடிமைப்படுத்தும் நிக்கோட்டின்

புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் எனும் அமிலம் ஒருவித போதையை ஏற்படுத்துகிறது. இந்த நிக்கோட்டின் ரத்தக்குழாய் வழியாக மூளைக்குச் செல்லும்போது ஒருவிதப் புத்துணர்வைத் தருகிறது. தொடர்ந்து புகைபிடிப்பவர்கள் நிக்கோட்டினுக்கு அடிமையாகின்றனர்.

சிகரெட்டைவிட மெல்லும் வகை புகையிலைகளில் நிக்கோட்டினின் அளவு அதிகம் உள்ளது. முந்தைய காலத்தில் புத்திக்கூர்மைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிக்கோட்டின் தற்போது தற்கொலை, மன அழுத்தம்‌, உடல்நலப் பாதிப்பு ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ளது.

புகைபிடிக்காதவர்களாக இருந்தாலும், சிகரெட் புகையைச் சுவாசிப்பதாலேயே நுரையீரலில் பாதிப்பு ஏற்படலாம். 2017-ம் ஆண்டின் உலகளாவிய புகையிலை ஆய்வின்படி இந்திய மக்கள்தொகையில் 19 சதவீத ஆண்களும் 2 சதவீத பெண்களும் புகைபிடிக்கின்றனர்.

29.6 சதவீத ஆண்களும், 12.8 சதவீத பெண்களும் மெல்லும் வகை புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். புகைபிடிக்காதவர்களில் 38.1 சதவீத ஆண்களும், 39.3 சதவீதப் பெண்களும் சிகரெட் புகையைச் சுவாசிக்கின்றனர்.

இனியாவது

இந்தியாவில் புகையிலையை எதிர்த்துப் பல சட்டங்கள் உள்ளன. புகை யிலைப் பொருட்களின் மீது எச்சரிக்கை விளம்பரம் இருக்கிறது. இருப்பினும், புகையிலைப் பயன்பாடு குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், கல்வி நிறுவனங்களின் அருகிலேயே புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. அரசும் மக்களும் இனியாவது விழித்துக் கொள்வார்களா?

* இந்தியாவில் 10-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.

* புகைபிடிப்பதால் 1.5 லட்சம் பேருக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது.

* வாய்ப் புற்றுநோயில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

* புகையிலையால் 4.2 கோடிப் பேருக்கு இதய நோய் ஏற்படுகிறது.

* புகையிலையால் 3.7 கோடிப் பேருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்படுகிறது.

* 2020-ல் புகையிலையால் ஏற்படும் உயிரிழப்பு 13 சதவீதமாக அதிகரிக்கும்.

* குழந்தை இன்மைக்கான முக்கியக் காரணம் புகையிலை.

-எஸ். சுபலட்சுமி

Comment