மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இன்று (28) அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் பூதவுடல் தாங்கிய பேழையை பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் சென்றனர்.
இதன் பின்னர் பாராளுமன்ற கட்டடத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பாரியாருடன் இணைந்து மலர் வளையத்தை வைத்து முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைசர்கள் என பலரும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட்டில் நடைபெறவுள்ளன.
இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில் இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பூதவுடல் நாளை (29) இறம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, நாளை மறுதினம் (30) கொட்டகலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்று முன்தினம் (26) இரவு காலமானார்.
Comment