
விபத்திற்குள்ளான “எக்ஸ்பிரஸ் பேர்ள்” கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கினார்.
“எக்ஸ்பிரஸ் பேர்ள்” கப்பல் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.
சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும்,
சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும்,
கப்பலை வெளியேற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் கௌரவ பிரதமர் இதன்போது அறிவுரை வழங்கினார்.
சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை அவர்்அறிவுறுத்தினார்.
கொவிட் தொற்று நிலைமை காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவை கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதனையும் கௌரவ பிரதமர் இதன்போது தெரிவித்தார்
மேற்படி கலந்துரையாடலில் கௌரவ அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, ரோஹித அபேகுணவர்தன, அலி சப்ரி, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர, நாலக கொடஹேவ மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், சட்டமா அதிபர் சஞ்சே ராஜரட்ணம், கடற்பதை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் யூ.டீ.சீ.ஜயலால், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் தயா ரத்நாயக்க, தேசிய சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சிறிபால அமரசிங்க உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பலவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comment