சென்னை: தமிழகம் முழுவதும் 400 பேர் கருப்பு பூஞ்சை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயனபாபு கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கருப்பு பூஞ்சை ஆய்வு தொடர்பான குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது.

கருப்பு பூஞ்சை பாதிப்பு
ஆலோசனைக்கு பிறகு நிருபர்களை சந்தித்த மருத்துவ கல்வி இயக்குனர் நாராயனபாபு கூறியதாவது:- கருப்பு பூஞ்சை பாதிப்பு ஒரு சில கொரோனா நோயாளிகளுக்கு தென்படுகிறது. மியூகோர்மைகோசிஸ் எவ்வாறு கட்டுப்படுத்துவது? தடுப்பு மருந்து உபயோகம் தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிபுணர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம்

இது நோயல்ல
கருப்பு பூஞ்சை என்பது ஒரு புதிய நோயல்ல. இந்த பூஞ்சை பாதிப்புக்கு கொரோனாவுக்கு முன்பே மாதத்திற்கு 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் நீண்ட நாட்களாக சிகிச்சையில் உள்ள நோயாளிகள், ஸ்டிராய்ட்டு எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு பூஞ்சை தொற்று அதிகம் பாதிக்கப்படுகிறதா ? என ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

400 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் 400 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிய மருத்துவமனைகளில் 30 படுக்கைகளும், சிறிய மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் வரை ஏற்படுத்த வலியுறுத்தி உள்ளோம். . பாதிக்கப்பட கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்வது தொடர்பான பணிகளை மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள நோடல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

சென்னையில் மட்டும் 111
சென்னை ராஜீவகாந்தி அரசு பொது மருத்துவமனையில் 111 பேர் வரை சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 56 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூக்கில் இருந்து கருப்பு நிறத்தில் திரவம் அல்லது ரத்தம் வெளியேறினால் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இத்தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து பரவும் தன்மை கொண்டது கிடையாது என்று நாராயணபாபு தெரிவித்தார்.
Comment