Breaking News:

ஒரு நோயாளி  என்னைப் பார்க்க வந்தார். என்ன செய்கிறது என்று கேட்டேன். ஒன்றுமில்லை. காலாவதியான மருந்தைச் சாப்பிட்டுவிட்டேன் என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது, இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றார். காலாவதியான மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டால் நாமும் காலமாகிவிடுவோமோ என்ற பயம் பலரிடமும் இருக்கிறது.  ஆனால்,  அப்படிப் பொதுவாக நேருவதில்லை.

மக்களின் மனநிலை


நமது நாட்டில் மக்களிடம் ஒரு தவறான பழக்கம் இருக்கிறது.  முதலில் மருத்துவரைப் பார்த்துவிட்டு,  அதன் பிறகு மருந்துக் கடைக்குப் போக வேண்டும்.  ஆனால்,  மருந்துக் கடைக்குப் போய்விட்டு ஏதாவது மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத்  தங்களது தொந்தரவு குறையவில்லை என்றால் அதன் பிறகுதான் மருத்துவர்களைப் பார்க்க வருகிறார்கள். மேலும், இவர்கள் ஓரிரு மாத்திரைகளை மட்டுமே வாங்குவார்கள்.

அவற்றில் அந்த மருந்தின் காலாவதியாகும் தேதி இருக்காது.  ஏன் மருந்தை விற்கும் கடைக்காரருக்கே அதன் காலாவதியாகும் தேதி  பெரும்பாலும் தெரிவதில்லை.  கொஞ்சம், கொஞ்சமாக வெட்டி,  வெட்டி கொடுக்கும் போது எதிலிருந்து எடுத்தோம் என்பதை எல்லோராலும்,  எப்போதும் நினைவில் வைத்திருக்க முடியாதுதானே.

மேலை நாடுகளில் நிலைமை

மேலை நாடுகளில்,  ஒரு சில மருந்துகளை மட்டும் [OTC Over-the-counter (OTC) drugs] நேரடியாக மருந்துக்கடையில் சென்று வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலைமை உள்ளது. ஆனால்,  இங்கு நிலைமையே வேறு! நமது நாட்டில்,  எந்த மருந்தையும், எப்போதும்,  எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியும் என்ற நிலைமை உள்ளது.  அதுவும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல்!

காலாவதியான மருந்தை உட்கொண்டால் என்ன நிகழும்?

பலரும் நினைப்பது போல நாள் கடந்த மருந்தை உட்கொள்வதால், அது விஷமாவதில்லை.  உயிரையும் மாய்ப்பதில்லை. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது நான்கு முக்கியச் சம்பவங்களை நாம் எதிர்நோக்கலாம்.

1) மருந்தின் செயல்படும் திறன் குறைந்து போகும். உதாரணத்துக்கு வலிப்பு மருந்துகளை உட்கொண்டால், அவை செயல் இழப்பதால், நோயாளிக்கு வலிப்பு ஏற்படும் அல்லது வலிப்பு வருவதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.

2) காலம் கடந்தும் சில மருந்துகளின் செயல்பாடுகள் குறிப்பிட்ட அளவுக்குக் குறையாததால், நோயாளிக்கு எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

3) மிகவும் அபூர்வமாகச் சில மருந்துகள் மாற்றம் அடைவதால்,  உடல் பாதிக்கப்படும்.  உதாரணத்துக்குக் காலாவதியான டெட்ராசைக்கிளின் மருந்தில் பல்வேறு ரசாயன மாற்றங்களும் ஏற்படுவதால், அது சிறுநீரகத்தைப் பாதித்துவிடும்.  ஆனால், அது கூட இப்போது கெடாதவாறு தயாரிக்கப்படுகிறது.

4) நாட்பட்ட நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அவற்றின் செயல்பாடு குறைந்துவிடுவதால், பின்னாளில் இதே மருந்துகளுக்கு நுண்ணுயிர்கள் எளிதில் அழிவதில்லை. அதே மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறனைப் (antibiotic resistance) பெற்றுவிடும். அதாவது, இதே மருந்துகள் வருங்காலத்தில் பயனில்லாமல் (treatment failure) போய்விடும்.


 

என்ன செய்ய வேண்டும்?

அரசாங்கம், காலாவதியான மருந்துகள் விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உரிமம் பெற்ற மருந்துக்கடைகள்  ஓ. டி. சி எனப்படும் மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்த வேண்டும். நோயாளிகளுக்கு ஓ. டி. சி (OTC ) மருந்துகளை மட்டுமே கொடுப்பதுடன், அவை விலை குறைவாக இருப்பதால் குறைந்தது 10 மருந்துகளாகத் தேதியுடன் கொடுக்க வேண்டும்.

காலாவதியான மருந்துகளை மொத்த மருந்து விற்பனையாளரிடம் கொடுத்து, அவர்கள் மூலம் மருந்து தயாரிப்பாளர்களிடம் சமர்ப்பித்து அவற்றை முறையாக அழிக்க வேண்டும். இது குறித்துப் பதிவு செய்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். மாசுபட்ட காற்றைச் சுவாசித்துக்கொண்டு, வேதிப் பொருள் மிகுந்த உணவை உட்கொண்டு நோய்களுடன் வரும் மக்கள் மருந்துகளையாவது சரியாகத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். நோய்க்கான மருந்தே நோயை உண்டாக்காமல் தடுத்துக்கொள்ள வேண்டும்.

மருந்துகளின் ஆயுள்

மருந்துகள் பெரும்பாலும் 2-5 வருடங்கள்வரைகூட காலாவதியான தேதியைக் கொண்டிருக்குமாறு தயாரிக்கப்படுகின்றன.  இருந்தாலும், அவை மேலும் பல வருடங்கள் பலன் தரக்கூடியவையாகவும், பயன் அளிக்கக்கூடியவையாகவும் இருக்கும் என்பதுதான் உண்மை. ஆராய்ச்சிகளும் இதையேதான் நிரூபிக்கின்றன. சுற்றுப்புற ஈரப்பதம், தட்பவெப்பம், காற்று போன்ற பல்வேறு காரணங்களால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது.

எந்த மருந்துகள் எளிதில் கெட்டு விடும்?

# திரவ மருந்துகள்,

# நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள்,

# இன்சுலின் ஊசி மருந்து,

# நைட்ரோகிளிசரின் மருந்து

# குழந்தைகளுக்கான சிரப்கள்

# பொடியாகத் தயாரிக்கப் பட்டுத் திரவமாகக் கலந்து தரும் மருந்துகள்

# சொட்டு மருந்துகள் (கண் சொட்டு மருந்து, காது சொட்டு மருந்து) எளிதில் கெட்டுவிடும்.

# ஊசி மருந்துகள்

செய்ய வேண்டியது என்ன?

# மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கும்போது, காலாவதியாகும் தேதியை மறக்காமல் பார்த்து வாங்க வேண்டும்.

# தலைவலி,  காய்ச்சல் என வாங்கும் மருந்து களைக்கூட 10 மாத்திரையாக வாங்குவது நல்லது.

# தேதி சரிவரத் தெரியவில்லை என்றால் அதைக் கொடுத்துவிட்டு வேறு மருந்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.

# மருந்துகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தேதிகளை டைரியில் குறித்துவைத்துக்கொள்வது நல்லது.

# காலாவதியான மருந்துகளை முறையாகச் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். அழிக்க வேண்டும்.

# பெரும்பாலான மருந்துகளை வெளியில் வைத்திருந்தாலும், வெயில் படாமல், வெப்பம் படாமல் பாதுகாப்பது நல்லது.


 

- டாக்டர் சு. முத்துச்செல்லக்குமார், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Videos

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top