Sunday, 16, Jun, 8:30 PM

 

 

எஸ்.பாயிஸாஅலி

 

ஒரு மரணவீட்டுக்கான அடர் சோகங்களைத் தன் ஆழ்ந்த மெளனத்தினூடாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது பாரம்பரியமும் ஒருவகையான தெய்வீகக் கலைநயமும் கலந்து நிறைந்த அப்பழையவீடு.

பழைய எனச்சுட்டுவது அதனது நிர்மாணக் காலஅளவையும் வடிவமைப்பையுமே தவிர மற்றப்படி தரையும்,சுவர்களும்,கதவுஜன்னல்களும் அதன் திரைச்சீலைகளும்கூடப் பளபளப்பு குன்றாமலேயே, அதுவும் கிட்டத்தட்ட முதன்முதலாய் 25வருடங்களுக்கு முன் இவ்வீட்டில் என் முதல்காலடி பட்ட ஒளிர்வெயில் நாளொன்றில் நான் கண்டதுபோலவே மினுங்கிக் கொண்டுதானிருந்தது.

இன்றைக்கான நான் கண்ட மாற்றமாய் வேறன்னசொல்வது…எனதருமைக் கணவனாரின் வெள்ளைத்தேவதைக்குத்தான் கொஞ்சம் வயசாகி இருந்தது.

எனினும் என்ன குறை!நிறைவாய் வாழ்ந்ததன் பூரிப்பும் பொலிவும் குன்றாப்பூரணையாய் துகில்வெள்ளைப் பருத்தியில் அம்மா.

அந்திமக் காலத்திலும் தேவதை தேவதையே..

கருங்காலிக்கலர்
ஈஸிச்செயாரில் மெல்லச் சாய்ந்தபடி அம்மா யாருடனோ அளந்துநிறுத்தி மிகவும் குறைவான அலைவரிசையில் உரையாடிக் கொண்டிருந்தா. அருகே சென்ற எமக்காய் அந்த வெண்வேட்டி ஐயா மெல்லிய முறுவலோடு இடம்தந்து ஒதுங்க...நானோ பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக்கி அமர்கிறேன்.

அம்மாவின் மற்றப் பக்கம் இவரும் மெல்ல அம்மாவின் கையைத் தொட்டு,

‘ம்மா. சுகமா?' என்கிறார்.

‘ம்ம் ம் …பரவாயில்லை.’

என்றபடி கண்களைச் இறுக்கி கண்ணாடியைச் சரிசெய்கிறா. புரிந்து கொண்ட என்னவர் இன்னும் கொஞ்சம் நெருங்கித்தன் பெயரைக் கொஞ்சம் அழுத்திச்சொல்லி குகன்ர ப்ரெண்ட் என்கிறார்.

ப்பாஹ்.. என்னவொரு மலர்வும் ஒளிர்வும் அத்தாய்மையின் விழிகளுக்குள்.

‘அட, முஹம்மட்’ என மெதுவாய் அவரின் ஒருகையை இறுக்கிக் கொண்டவாறே என்பக்கம் திரும்பி,

“உன்ரை வைஃப்தானே… ? கொஞ்சம் உடம்பு வெச்சிட்டா என்ன..?”
என்கிறார்.
அவரிடம் இருந்து ஒருகையை விடுவித்தபடி மெதுவாய் என்னை அணைத்துக் கொண்டு.

நானும் அவர் முதுகை வருடியவாறே, ‘அம்மா எப்படி இருக்கீங்க? ஐயாட காரியத்துக்கு எனக்குத்தான் வரக்கிடைக்கல.. sorry மா.’’

என்று மெதுவாய் இழுக்கிறேன்.

“பரவாயில்லே. இந்தா வந்திருக்கீங்கதானே..”

உடலின் நடுக்கமும்அதிர்வும் பேசும்போது இன்னும் கொஞ்சம் அதிகரிக்க என் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறா.

முதிர்வின் சுருக்கம் பரவிக்கிடந்த பொன்விரல்களை மறுபடியும் தடவியவாறே,

“படிக்கிற காலத்தில ஓங்க கையாலே நெறயத்தரம் இவர் சாப்பிட்டிருக்காராமே. அடிக்கடி சொல்வாரம்மா…”
என்றதும், ‘அப்படியா?’என்றபடி அழகாய் முறுவலிக்கிறா.

ஹோலை ஒட்டி இருந்த பூஜையறையில் இருந்து ஒலித்துக் கொண்டிருந்த அழகான பெண்குரல் ஓய்ந்து, கதவு திறபடும் ஓசை.

ஏற்கனவே குரலில் ஊகித்திருந்தபடியே மருமகள்தான்.

கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடனஆசிரியையாய் இருந்தவர். 20 வருடப் பணிப்பூர்த்தியோடு தனியொரு நடனக் கல்லூரியை தலைநகரில் அவரே தொடங்கி விட்டார்.

வெளிநாடுகளுக்கும் இது தொடர்பில் சுற்றுப்பயணம் கூட அவ போய் வந்ததாக ஒருமுறை ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘என்ன மொகமட் அண்ணன் சுகமா… ? ‘என்றவாறு என்னைப் பார்த்து, ‘நீங்க..?’ என்றளவுக்குள் உரையாடலை சுருக்கியபடி குசினிப் பக்கமாய் நகர்கிறா.

ஒழுங்காய் மூடப்படாததில் சாமி அறைக்கதவு காற்றில் படபடத்ததில் என் விழிகள் அவ்வறைக்கதவில் நிலைக்குத்தி நிற்க என்னை மௌனத்தில் நெகிழ்ந்துறையச் செய்தபடி நினைவுக் குருவிகள் தமக்குள்ளே கீச்சிடத் தொடங்கிற்று.

0

அந்த முதல் சந்திப்பில் வீடெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்...
‘சாமியறையையும் பார்க்கிறிங்களா ? இதுதான் என்றில்லை.. எல்லாரும் இருப்பினம்.’’

என்றபடி உயர்ரக ஊதுபத்திமணம் பரவியிருந்த இதே அறைக்குள்ளேயும் அம்மா கூட்டிப் போனா.

இந்துக் கடவுளர் மட்டுமன்றி புத்தர், இயேசுபிரான்.. எல்லோரிலும் பெரிய ஆளாய் சாயிபாபாவும்…

சிரித்தபடியே இப்ப நான் சாயி பக்தையாக்கும்…ட்ரின்கோ விலே இப்ப சாயி பஞனை எல்லாம் தொடரா நடத்துறாங்கம்மா." என்கிறா.

அப்படியா………?என்றதும், மலர்ச்சியாய் ‘ இங்கே பாருங்க உங்கட குரானும் டிரான்ஸ்லேஷனொட வெச்சிருக்கிறேன்.’ என்கிறா.

வியந்துபோய் நிமிர, அங்கே சுவரில் உயரமான ராக்கையில் கரும்பச்சை நிறத்தில் பெரிய குர்ஆன் ஒன்றும் சந்தனக்கலர் தஸ்பீஹ் மாலையும் இருந்தன.

அந்தக் கணமே மனசு சிறுஇறகாகி மிதந்தெழும்பிற்று.

நல்லிணக்கத்தை என்றென்றைக்குமாய் உயிர்ப்பிக்கும் மனிதநேயம் மிக்க அன்புள்ளங்கள்.

என்னவொரு அற்புதமான பேரன்பும் கனிவும் அக்கறையும். அப்படியே சம்மணமிட்டு அந்த அறைக்குள்ளேயே சட்டென்று உட்கார்ந்து விடுவோமா எனத் தோன்றிற்று எனக்கு.

ஏலெவலில் கணவரும் சுகன் அண்ணனும் சென்ட்ஜோசப் கல்லூரியில் ஒன்றாய் படித்ததாம். கொஞ்சம் படிப்பும் கூடுதல் சுத்தலுமாய் ரெண்டு வருசம் கரைந்துபோக ரெண்டு பேருக்குமே ரிசல்ட் 3s தானாம்.

கணவரோ தன் வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டு இந்த அம்மாவிடம் தஞ்சம் புக,வழமையான அதே முறுவலுடன்,

‘பரவாயில்லை மகன். நீங்க எடுத்தது மத்ஸ் எல்லோ ஃபர்ஸ்ட் சையில இதுவே பெரிசு. இன்னொருக்கா ட்ரை பண்ணினா போச்சு’ என்றிருக்கா.

குடும்பச் சிக்கல்கள் இவரை வளைகுடாவுக்குத் துரத்த நண்பரோ அடுத்த முறையும் சோதினை எழுதிப் பாஸ் பண்ணியதோடு ஓய்ந்து விடாது இங்கேயே வேலையில் சேர்ந்து ஜப்பான்,கொரியா, புலமைப் பரிசில்கள், பதவி உயர்வுகள் எனத் தொடர்ந்து உழைத்ததில் இன்று திருமலையில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சீமெந்து தொழிற்சாலையின் அதிஉயர் அதிகாரக் கதிரையில்.

எந்த உச்சியிலே இருந்தாலும் அதே இறுக்கமான சினேகமும் நட்புறவும் என் கணவரோடு இந்த 30 வருடங்கள் கடந்தும் துளியும் குறையாதபடி.

அம்மா கொன்வென்ட்டில் ஆங்கில ஆசிரியையா...அதிபரா இருந்தவர். ஐயா கச்சேரியில் ஜிஏக்கு செயலாளராம். ஆணும் பெண்ணுமா நான்கு பிள்ளைகள். இப்ப லண்டனிலும் அவுஸ்திரேலியாவிலும்…

சுகம் அண்ணனும் பிள்ளைகளின் படிப்பு, பாதுகாப்பு என்பதற்காகக் கொழும்பிலும் இங்குமாய் பிளைட்டில் பறந்தபடி.

அன்றைக்கும் அப்படித்தான்..! என்னவொரு உபசரிப்பு அம்மாவிடமிருந்து எங்களுக்கு.

மஞ்சள் சோறு.. காரட்சம்பல், கத்தரிக்காய் களியா, பப்படப் பொரியல், கோழிக்கறி என டைனிங் ஹோலின் பெரிய சாப்பாட்டு மேசையில் அழகாய் பரப்பி இருந்தா.

நண்பர் இருவரும் சாப்பாட்டுடன் நிறைவேறாத தங்கள் பள்ளிக்காலக் காதல் கதைகளில் (இவர் உன்ர மைனா…மைனா என ஏதோ குசுகுசுக்க..அவரோ அவ அப்பவே சுவிசுக்குப் பறந்திட்டாவே என சோகமாய் சிரிக்க.)

நானோ எனது பீங்கானில் கோழிக்கறியைப் போடுவதா வேண்டாமா எனக் குழப்பமாய்…

“பிள்ளை. பயப்பிடாம சாப்பிடுங்கோ.. இஞ்சை ட்டவுனிலை இருக்கிற உங்கட ஆட்கள்ட கடையில்தான் வாங்கினது. ஐயா வழமையாக அங்கேதான் எடுப்பார். அவை கொஞ்சம் நீற்றா செய்வினம்" என்றாவே.. !

அட என்னவொரு புரிதல்…
நான் கோழியை தக்பீர் செய்து முறைப்படி அறுத்து இருப்பார்களா.
இதைச் சாப்பிட முடியுமா...என்று தடுமாறிக் கொண்டிருந்ததை சொல்லாமலே இவர் எப்படிக் கண்டு பிடித்தார் பாருங்களேன்....!
O
கணவர்தான் மெதுவாய்..
" பிறகு ஐயாவுக்கு என்னமா நடந்தது?"

என்று மௌனம் கலைக்கிறார்.

‘உமக்கு தெரியும்தானே. அவர் எவ்வளவு எக்டிவான ஆள் என்று. நான்தான் தம்பி போக வேண்டியவ. அண்டைக்கும் இப்படித்தான்..இரவு வோஷின் ரூமில வழுக்கி விழுந்திட்டென்…’

“பிறகு……?” நான் கிடந்து பதறினேன்..

“எழும்பேலாம போயிற்று. பிறகு ஐயாதான் ஒரு சாக்கில மெல்லமா அசைச்சு அசைச்சு இருப்பாட்டி ரூமுக்குள்ள கொண்டுவந்தவர்…”

அவங்கட பாத்ரூம் இப்ப எல்லா வீடுகளிலும் இருக்கிற மாதிரி ரூமொட சேர்ந்ததா இல்லாம வீட்டோடு ஒட்டியதாய் வெளியே அழகான குளியல் தொட்டியுடன் சேர்ந்த பெரிய பாத்ரூம்.
அப்ப அதுதான் நான் முதல் தடவையா அப்படி அழகா.. விசாலமா பார்த்து வியந்தது நினைவு வந்தது.

‘கட்டிலிலே ஏற ஏலாம போயிற்று. கீழே பெட்ஷீட்டை விரித்து தந்தார். இடுப்பு, முதுகுக் கெல்லாம் பாம் தடவி... கோப்பி போட்டுத்தந்து விடிய விடிய முழிச்சு இருந்தாரடா...(கொஞ்சம் அழுகை)

பிறகு மௌனம்..

"நான்தான் முதலிலே போவேன் என்று நினைச்சேன்.."

மெல்லிய விசும்பல்..

“இப்ப கொஞ்ச நாளாதான் அடிக்கடி நெஞ்சுவலி எண்டார். இங்கேயும் வைத்தியம் பார்த்துப் பார்த்து அழுத்துப் போய்..இனி ஒரே வழி ஓப்பரேஷன் தான் எண்டிற்றாங்க.

கடைசியிலே மகன் ஃப்ளைட்டிலேதான் கொழும்புக்கு கொண்டு போனார்.

" வெளிக்கிடும்போதே நான் திரும்பி வரமாட்டேன்"
என்று அழுதவர்.

" பொத்திப் பொத்தி நாம வளர்த்த குஞ்சுகள் எல்லாம் சிறகு முளைச்சிப் பறந்து போனப்பவெல்லாம் நாமளே நமக்கு உதவி... ஆறுதல் என்றிருந்தம். இப்ப உன்னை விட்டுப் போரண்டா ..!"
என்று விசாரப்பட்டவர்.

" வாகனத்தில ஏறும்போது என் கையை பிடித்துக் கொண்டு கன்னத்தில ஆய் குடு என்டார். நான் குடுத்தபிறகு என்னையும் அணைச்சு முகம் முழுக்க கிஸ் பண்ணிப் போட்டுதான் போனவர்.”
அம்மா
மெதுவாய் குலுங்கி அழுகிறா.

முள்ளந்தண்டில் ஒரு கூடை ஐஸ் கட்டிகளை கொட்டி விட்டதுபோல சிலிர்த்துப் போனேன் நான்.

எங்கட ஊர் பக்கம் வயசான தம்பதிகள் அருகுக்கு இருந்து கதைக்கிறதே ஏதோ பெரிய பிழையான ஒன்றாய் நினைத்து தள்ளித்தான் இருப்பாங்க.

வயசு போனவுடன் உம்மா ஒரு பிள்ளையிடம்..வாப்பா இன்னொரு பிள்ளையிடம் ,பாவம் சம்பளமில்லாத வேலைக்காரராய்.
பிள்ளைகளும் பெற்றவர்கள் வயசான காலத்தில் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருக்கும் என்றெல்லாம் யோசிப்பதும் இல்லை.
வயசான தம்பதிகளும் இது நம்மட மனைவி/கணவர் இல்லையா..
நாமதான ஒருவருக்கொருவர் விட்டுப் பிரியாம அன்பா.. அரவணைப்பா இருக்கணும் என்றெல்லாம் நினைப்பதுமில்லை.
பிள்ளைகள்,பேரப் பிள்ளைகள்,ஊரு உலகம் என்ன சொல்லுமோ என்று மட்டும் நினைத்து ஆளையாள் யாரோ வேற்று மனிசராய் அல்லாஹ்வே.. ரசூலே..என்று சூபித்துவம் பேசிக் கொண்டு இஸ்லாத்தில் இல்லாததை எல்லாம் மார்க்கம் என்று எண்ணி இன்னமும் அறியாமையில் புதைந்து போய் கிடக்கின்றனர்.

ஆனால்.. என்னவொரு நெருக்கம் இந்தத் தம்பதிகளுக்கிடையில்..!
மனசு நிறைந்து போகிறது எனக்கு.

‘பாரெண்டா தம்பி..! இப்ப தனிச்சிப் போனேன்…’

மெலிந்த சொற்களின் பேரதிர்வுகள்.

நடுங்கும் அழகுதேவதையின் நலிந்த விரல்களைக் கைககளுக்குள் பொத்திக் கொண்டபோது அந்த மெல்லிய சூடு பேருஷ்ணமாகி எனக்குள் பரவ மெழுகென உருகிக் கரைந்திற்று என்னுடல்.

இவர்களின் அற்புதமான காதல் வாழ்க்கைக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்றானது எனக்கு.

கணவர் கண்கள் பனிக்க
"ம்மா..!!"

எனக் கேவுகிறார்.

ஈரம் புகையென மறைத்த அம்மாவின் கண்ணாடியை மெதுவாய் கழற்றி என் சோலால் ஒற்றித் துடைக்கிறேன் நான்.

காய்ந்துவறண்ட உதடுகள் சிந்திய பேரன்பின் ஈரமுத்தங்கள் பறக்கும் வெள்ளரிப் பூக்களென எம்மைச்சுற்றி ஹோல் வெளியெங்கும் நிறைந்து பரவிற்று.

மருமகள் எமக்காய் வைத்துச் சென்ற சில்வர் தம்ளர்களுக்குள் தேநீர் ஆடை மிதத்தியபடி குளிர்ந்துபோய் கிடக்கிறது.

0

ஒரு ஆறேழு மாதங்கள் கழித்து அம்மா இறந்துபோனதாகத் தகவல் வர..

கணவர்,
“இதுதான் கடைசிப் பார்வை, அம்மாவுக்கான இறுதி மரியாதை ‘’

என்று அவசரமாக என்னையும் ரெடியாகச் சொல்கிறார்.

நான் முடியவே முடியாதென மறுத்து விட்டேன்.

அம்மாவின் மென்விரல்களின் சூடு இன்னும் என்னுள் ஒட்டிக் கிடக்கையில்...
குளிர்ந்து இறுகிக் கிடக்கும் அவரின் உடலைப்பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

 

எஸ்.பாயிஸாஅலி
கிண்ணியா.

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners