Sunday, 16, Jun, 9:29 PM

 

 
 
கிண்ணியாவிலிருந்து மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் உலமா மர்ஹூம் எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவி அவர்களாவார். இவர் மர்ஹூம்களான சதக்கு லெப்பை – கதீஜா பீவி தம்பதிகளின் தலைமகனாக 1950.02.17 இல் குறிஞ்சாக்கேணியில் பிறந்தார்.
 
தனது ஆரம்பக் கல்வியை குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றார். சஹ்தியா அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியைக் கற்றார். அதன் பின் விளையாட்டாசிரியராக நியமனம் பெற்று யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார்.
 
இதன்பின் தனது பதவியைத் துறந்து பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்கு கற்று பட்டம் பெற்றார். இதனால் இவரது பெயருக்கு பின்னால் அஸ்ஹரி என்ற பட்டமும் சேர்ந்து கொண்டது. இவரது கல்வி நடவடிக்கைகள் சிலவற்றில் மைமூன் நகை மாளிகை உரிமையாளர் மர்ஹூம் அல் ஹாஜ் ஆர்.எம்.சக்கரியா அவர்களின் உந்துதல் இருந்துள்ளது.
 
பல்துறை ஆற்றல் கொண்ட இவர் தனது சொல்லாட்சியின் மூலம் மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார். கம்பீரமான குரல் மிக்க நாடறிந்த உலமாவான இவர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாயல் மிம்பர்களில் ஜும்ஆப் பிரசங்கம் செய்துள்ளார். இதன் மூலம் பல பிரமுகர்களின் தொடர்பு இவருக்கு இருந்தது.
 
பேருவளை ஜாமியா நளீமியாவில் சிறிது காலம் விரிவுரையாளராக பணியாற்றிய இவர் பின்னர் அதனைக் கைவிட்டு இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதனால் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிலும் செல்வாக்கு மிக்க ஒருவராக இவர் மாறினார்.
 
பல்வேறு சமுகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் கண்டி ஒராபி பாஷா மன்றத்தின் முதல் பணிப்பாளராக பணியாற்றினார். அஸீஸா பவுண்டேசன், ஹஸன் மௌலவி நற்பணி மன்றம் ஆகியவற்றை நிறுவி அதன் மூலம் பல்வேறு சமூகப் பணிகள் செய்து வந்தார். 
 
ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் காலத்தில் திருகோணமலை மாவட்டத்தின் சகல பகுதிகளையும் சேர்ந்த ஏழைகள் மற்றும் விதவைகளைத் தேடி உணவுப் பொதிகள் வழங்கி அவர்களுக்கு உதவும் திட்டத்தை அமுல் படுத்தி வந்தார் 
 
அதேபோல ஹஜ் காலத்தில் உழ்ஹிய்யா வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தி வந்தார். இதனால் மாவட்டத்தின் சகல மூலைமுடுக்குகளிலும் இவரது நாமம் நிலை நிறுத்தப்பட்டது.
 
குறிஞ்சாக்கேணியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறாக சிறுவர் இல்லங்களை நிறுவி அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வறிய சிறுவர்களை உள்வாங்கி பராமரித்து வந்தார். இந்த இல்லங்கள் இன்றும் தலைநிமிர்ந்து காட்சியளிக்கின்றன.
 
சிறந்த எழுத்தாளரான இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் 'மனிதன் புனிதாக' என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. கூடுதலாக விமானப் பயணங்களிலேயே அதிக விடயங்கள் எழுதியுள்ளதாக அவர் ஒரு முறை கூறியது நினைவிலிருக்கிறது.
 
1994 ஆண்டு இவர் அரசியலில் பிரவேசித்தார். அப்போது நடைபெற்ற கிண்ணியா பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டார். எனினும் அப்போது அவரால் வெற்றி பெறமுடியவில்லை. 2000, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டு கனிசமான வாக்குகள் பெற்றார்.
 
2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு 16,640 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவிலிருந்து மாகாணசபைக்குத் தெரிவான முதல் உலமா என்ற பெருமையை இவர் பெறுகிறார். 
 
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 10,732 வாக்குகள் பெற்று வென்றார்.
 
இவரது ஜும்ஆவைக் கேட்பதற்கு மக்கள் ஆர்வமாக இருப்பது போல இவரது பொதுக் கூட்டங்களிலும் இவரது பேச்சைக் கேட்பதற்கு மக்கள் ஒன்று கூடுவர். மிகவும் ஹாஸ்யமாக எல்லோரும் விளங்கும் மொழிநடையில் பேசுவது இறைவன் இவருக்கு கொடுத்த அருட்கொடைகளுள் ஒன்று. 
 
தனது அரசியலைப் பயன்படுத்தி பல சமூகப் பணிகள் செய்த இவர் சில நியமனங்களும் வழங்கியுள்ளார்.
 
இப்பத்துல் பெரோசா, தாரிக், சாதிக், பாத்திமா ஹாஜர், அஸதுல்லாஹ், லுக்மான் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
சில மாத காலம் சுகவீனமுற்றிருந்த இவர் 2014.08.10ஆம் திகதி கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். எனினும், அவரது விருப்பப்படி அவரது ஜனாஸா கிண்ணியாவுக்கு எடுத்து வரப்பட்டு குறிஞ்சாக்கேணி பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners