Sunday, 16, Jun, 8:29 PM

 

 
கிண்ணியாவின் முதலாவது கல்வியியல் கலாநிதி ஜனாப். ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது – மர்ஹூமா உம்மு குல்தூன் தம்பதிகளின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா குட்டிக்கரச்சையில் பிறந்தார்.
 
அப்போது கலவன் பாடசாலையாக இருந்த குட்டிக்கரச்சை வித்தியாலயத்தில் (தற்போது இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம்) தரம் 7 வரை கல்வி கற்ற இவர் பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரியில் சேர்ந்து  க.பொ.த (சா.த) வரை கற்று சித்தியடைந்தார்.
 
தனது 20 வது வயதில் அதாவது 1978 இல் கணித பாட ஆசிரியராக நியமனம் பெற்றார். காக்காமுனை தாருல் உழூம் மகா வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கணித பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
1982, 1983 காலப்பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் அல் அக்ஸா கல்லூரியில் பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக நியமனம் பெற்று 1992 வரை அங்கு கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.
 
கிண்ணியா கோட்டக்கல்வி அலுவலகம் 1992 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கணித பாட ஆசிரிய ஆலோசகராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் கணித பாட ஆசிரிய ஆலோசகர் இவராவார். 
 
2002 - 2004 காலப் பகுதியில் கல்விமானி கற்கைநெறியை மேற்கொண்டு 2ஆம் வகுப்பு உயர்தரத்தில் சித்தியடைந்தார். எனவே, கிண்ணியாவின் முதல் கல்விமானி (சிறப்பு) என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
 
2007-2008 காலப்பகுதியில் முதுகல்விமானி கற்கைநெறியை மேற்கொண்டு முதுகல்விமானி பட்டதாரியானார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது. 
 
வடக்கு கிழக்கு மாகாண ஆங்கிலமொழி மூல கணிதபாட வளவாளராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து ஆங்கிலமொழி மூல கணிதபாட ஆசிரியர்களுக்கு வழிகாட்டியுள்ளார். 
 
2011 இல் கிண்ணியாவின் ஆசிரியர் வள நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது முகாமையாளராக இவர் நியமனம் பெற்றார். இக்காலப்பகுதியில் இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்திபெற்று அதிபர் தரத்தையும் பெற்றுக் கொண்டார்.
 
2012.11.21இல் மூதூர் மத்திய கல்லூரி அதிபராகக் கடமையேற்றார். சுமார் ஒரு வருட காலம் அங்கு பணி புரிந்த இவர் அப்பாடசாலையின் அபிவிருத்திக்காக பல்வேறு பணிகள் செய்தார். 2013.09.16  இல் தனது 55வது வயதில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
 
ஓய்வுக்குப் பின் 2019 டிசம்பரில் கல்வியியல் கலாநிதி பட்டத்தை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் கிண்ணியாவின் முதலாவது கல்வியியல் கலாநிதி என்ற பெருமைக்குரியவராகின்றார்.
 
சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர் கிண்ணியா நிஜாமியா நிலைய முகாமைத்துவக் குழுவின் முக்கியஸ்தராகவும், மத்திய பள்ளிவாயல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
 
தேசிய கல்வி நிறுவகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பகுதிநேர ஆசிரிய கல்வியியலாளராக பணியாற்றுகின்றார். இதன் மூலம் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெயைத் தொடரும் ஆசிரியர்களுக்கு விரிவுரையாளராக செயற்படும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. 
 
இதனைவிட புத்தளம் மேர்சி கல்வி நிலையத்தின் நிபுணத்துவ ஆலோசகராகவும், ஆறுதல் அமைப்பின் முன்பள்ளி ஆசிரியர் போதனாசிரியராகவும், ஐரோப்பியன் கெம்பஸின் கல்விசார் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார். 
 
கல்விக்கு வயதெல்லை தடையல்ல. அரச நியமனம் பெற்ற பின்னர் மட்டுமல்ல ஓய்வு பெற்ற பின்னரும் கற்று உயரலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரண புருஷராவார். ஏனெனில் க.பொ.த சாதாரண தகைமையோடு அரச நியமனம் பெற்ற இவர் இன்று கல்வியியல் கலாநிதியாக உயர்ந்துள்ளார்.
 
இன்றைய இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கும், ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் இவரது கல்வி வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாகும். எல்லோருடனும் அன்பாகப் பழகும் இவர் நல்லதொரு கல்விச் சமூகம் உருவாகப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். 
 
இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் இன்று அரச, தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து வருவது இவரது அர்ப்பணிப்பான சேவையின் அடையாளச் சின்னங்களாகும். அந்த வகையில் நானும் இவரது மாணவர்களுள் ஒருவன் என்ற வகையில் மிகவும் சந்தோசமடைகின்றேன்.
 
அச்சும்மா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். மப்ரூஸ் (மொரட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்), முப்ரி (தனியார் கட்டட நிர்மான அமைப்பின் தொழில்நுட்பவியலாளர்) ஆகியோர் இவரது புதல்வர்களாவர். 
 
ஓய்வுக்குப் பின்னரும் கல்விப் பணி செய்யும் ஒரு சிலருள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners