Sunday, 16, Jun, 9:08 PM

 

டாக்டர் ப்ரியாந்தினி கமலசிங்கம்

Intussusception என்னும் குடல் ஏற்றம்: குடலின் ஒரு பகுதி மடிந்து telescope ( படத்திலுள்ளது போல) போல மறுபகுதியினுள் உட்செல்வதாகும். இதனால் சமிபாடடைந்த உணவு கீழே செல்ல இயலாமல் தேங்கிவிடுகிறது. இது சிலவேளைகளில் உயிராபத்தில் முடியும் நோயாகும். (தகுந்த கவனமின்றி அலட்சியமாக இருக்கும் பட்சத்தில்)

பெரும்பாலும் 3 மாதத்திலிருந்து 6 வயது வரை உள்ள சிறார்களே அதிக பாதிக்கப்படுகின்றனர். இதில் 60 வீதமானோர் 3 மாதத்திலிருந்து ஒரு வயது வரையானோர் .
பெண்பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் ஆண் பிள்ளைகள் நான்கு மடங்கு (x4) தடவை அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சரியான சிகிச்சை அளிக்கப்படாமலும்/ தகுந்த வேளையில் இனம்காணப்படாவிடினும் இந்நோய் பாரதூரமான விளைவு களுக்கு இட்டும் செல்லக் கூடியதொன்றாகும்.

சாதாரணமாக வயிற்றுப் பகுதித் தொற்றிலிருந்து (abdominal infection)தொடங்கி குடல் தொற்று (intestinal infection) அடிவயிற்றுக்குடல் வெளிப்புற சவ்வு அழற்சி (Peritonitis) வரை சென்று இறுதியில் மரணம் வரை அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இந்நோய் ஏற்படுவதன் காரணம் இன்றுவரை சரியாக வரையறுக்கப்படவில்லை. (cause : unknown) சில வேளைகளில் குடலின் அமைப்பில் ஏற்படும் சவ்வு வளருதல் போன்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக அமையலாம்.

குடல் ஏற்றத்துக்கான அறிகுறிகள்

📌ஒரு சாதாரண ஆரோக்கியமான உடல்நிலையில் பிள்ளை ஒருவருக்கு திடீரென (sudden onset) வயிற்று வலி ஏற்பட்டு, விட்டு விட்டு தொடரும் (Intermittent) வயிற்றுவலி.
விட்டு விட்டு ஏற்படும் இவ்வலியின் இடைவேளையில் குழந்தை இயல்பு நிலையில் இருப்பது சாத்தியமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
📌பச்சிளம் குழந்தையாயின் (infants) கைகள், கால்களை வலிந்து உள்ளிளுத்து வீறிட்டு அழுவது.
📌வாந்தியெடுத்தல்
📌சிவப்பு ஜெலி போன்று மலம் கழித்தல்.

இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தென்படினும் உங்கள் குழந்தையை உட னடியாக, தாமதிக்காமல் வைத்தியசாலைக்கு கொண்டு வரவேண்டும்.

வைத்தியர் X–ray கதிர் மற்றும் ஸ்கான் போன்ற சோதனைகளை உடனடியாக மேற்கொண்டு குடல் ஏற்றம் ஏற்பட்டிருக்கும் பகுதியை இனம்காண்வர். பின்னர் Saline reduction /hydrostatic reduction – அதாவது மலவாசலினூடு எனிமா மூலம் குடல் ஏற்றத்தினை சரிசெய்ய முயல்வர்.

10–15 வீதமான குழந்தைகளுக்கு இது பலனளிக்காமல் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படுகின்றது.

❌குடல் ஏற்றம் ஏற்பட்டு, மேற்கூறியவாறு சீர்த்திருத்தப்பட்ட, ஒரு குழந்தைக்கு 24 மணித்தியாலயங்களுக்குள் மீண்டும் குடல் ஏற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதனால், மருத்துவ அவதானிப்பில் ஒருநாள் வைத்தியசாலையிலிருந்து மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வீடு செல்ல அனுமதிக்கப்படுவர்.❌

ஒருமுறை குடல் ஏற்றம் ஏற்பட்ட பிள்ளை ஒருவருக்கு

101 க்கு மேற்பட்ட காய்ச்சல்
வாந்தி
வயிற்றோட்டம்
ஜெலித்தன்மையான மலம் கழிப்பு
வயிற்றுவலி

ஏற்படின் உடனடியாக வைத்தியசாலையை அணுக வேண்டும்.
குடல் ஏற்றத்தினால் சம்பவிக்கும் சிறுவர்க ளின் மரணம் 100 சதவீதம் தடுக்கப்படக்கூடி யது.

article written on Uthayan News paper 27.12.21 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners