திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 07 ஆம் திகதி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்குபெறும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நாளை மாலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக த ஹிந்து ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
முதல்வர் தமது இராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளின் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடனான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடனான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி கண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் 158 ஆசனங்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 76 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆசனங்களின் எண்ணிக்கை 118 ஆகும்.
இம்முறை தமிழகத்தின் இரண்டு முன்னணி கட்சிகளும் தமது நீண்டகால தலைவர்களின்றி தேர்தலில் களம் கண்டன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜே. ஜெயலலிதா 2016 இல் காலமானதுடன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி 2018 இல் காலமானார்.
இவர்கள் இருவரும் காலமானதன் பின்னர் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அரசியலுக்குள் பிரவேசித்தார்.
எவ்வாறாயினும், இந்த தேர்தலில் அவரால் ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்ற முடியவில்லை.
அத்துடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நடிகை குஷ்பு, தே.மு.தி.க கட்சியின் பொருளாலரும் அந்த கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
50 வீத தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெற்றிபெறவில்லை.
திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய சீமானுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் வாக்குவங்கியை சிதறடிக்கும் என கூறப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
மிழகத்தில் புதிய அரசு பதவிப்பிரமாண நிகழ்ச்சியை ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஆளுநர் மாளிகையிலேயே நடத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இலயோலா கல்லூரி வளாகத்தில் பெற்றுக் கொண்டு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்
அதன் பின்னர் செய்தியாளர்களை நேற்று (02) சந்தித்த அவர் அளித்த பேட்டியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழகத்து மக்கள் வழங்கியிருக்கும் இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்திருக்கும் அனைவருக்கும் திமுக சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை - வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பத்தாண்டு காலமாக தமிழகம் ஒரு பாதாளத்திற்குப் போயிருக்கின்றது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்து – புரிந்து, அதனைச் சரிசெய்ய திமுக தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு - ஆட்சிக்கு வர வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு மிகப்பெரிய ஆதரவை - மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
எந்த எதிர்பார்ப்போடு அந்த வெற்றியைத் தந்து இருக்கிறார்களோ - எந்த நம்பிக்கையோடு எங்களிடத்தில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், அந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களுடைய ஆட்சி நிச்சயம் அதனை நிறைவேற்றித் தரும்.
எங்களையெல்லாம் ஆளாக்கிய கருணாநிதி ஐந்து முறை தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் முதல்வராக இருந்து தமிழகத்து மக்களுக்கு ஆற்றியிருக்கக்கூடிய பணிகள் ஆகியவற்றையெல்லாம் நாங்கள் உணர்ந்து அவர் வழி நின்று ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படிப் பயிற்றுவித்து இருக்கிறார்களோ, அந்த வழிநின்று எங்கள் கடமையை நிச்சயம் ஆற்றுவோம்.
அவர் இருந்த காலத்திலேயே திமுக ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று நாங்களெல்லாம் எண்ணியிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது என்பது எங்களுக்கு ஏக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் அந்த ஏக்கம் இன்றைக்கு ஓரளவுக்கு போயிருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்.
'மக்கள் குரலே மகேசன் குரல்' என்று அண்ணா சொல்வார்கள். ஆகவே மக்கள் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு வாக்களித்தவர்கள் 'இவர்களுக்கு நாம் வாக்களித்தது நன்மைதான் மகிழ்ச்சிதான்' என்று உணரக் கூடிய வகையிலும், வாக்களிக்காத அவர்கள் 'இவர்களுக்கு நாம் வாக்களிக்காமல் போய் விட்டோமே' என்று எண்ணக்கூடிய அளவுக்கு நிச்சயமாக எங்களுடைய பணி அமையும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பணிகளெல்லாம் ஆற்றுவோம் என்று வாக்குறுதிகளாகத் தந்திருக்கிறோம். அவற்றையெல்லாம் படிப்படியாக நாங்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து நிறைவேற்றுவதற்கான முயற்சியில் எங்களை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, எப்படி ஐந்தாண்டு காலத்துக்கு தேர்தல் அறிக்கை தந்திருக்கிறோமோ, அதைப்போல் பத்தாண்டு காலத்தை அடிப்படையாக வைத்து தொலைநோக்கு பார்வையோடு ஏழு அறிவிப்புகளை நான் ஏற்கனவே அறிவித்து இருக்கிறேன். அவற்றையும் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபடுவோம் - தொடர்ந்து பணியாற்றுவோம்.
அண்ணா வழி நின்று கருணாநிதி பயிற்றுவித்திருக்கக்கூடிய வழிநின்று எங்கள் கடமையை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று நான் உறுதி எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
பதவி ஏற்பு விழா
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வெற்றிச் சான்றிதழ்களை பெற்ற பிறகு, நாளைய தினம் (03) (இன்று) நாங்கள் முடிவு செய்து நாளை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, அந்தக் கூட்டத்தில் முறையாக தலைவரைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பிறகு அரசு அதிகாரிகளோடு கலந்துபேசி, எப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வது என்பதை முடிவு செய்து விரைவில் அறிவிக்கவுள்ளோம்.
அதுமட்டுமல்ல, இப்போது கொரோனா காலம். கெரோனாவின் கொடுமை எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நாம் அறிவோம். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பதவிப்பிரமாண நிகழ்ச்சியை ஆடம்பரமாக - விழாவாக நடத்தாமல் எவ்வளவு எளிமையாக நடத்த முடியுமோ, குறிப்பாக, ஆளுநர் மாளிகையிலேயே அதை நடத்துவது என்று நாங்கள் முடிவு செய்திருக்கின்றோம். அது எந்தத் தேதி என்பதை நாளையோ (இன்று) அல்லது நாளை மறுநாளோ (நாளை) நான் நிச்சயமாக அறிவிக்கின்றேன்.
பல்வேறு தேசிய கட்சித் தலைவர்களும் மாநிலக் கட்சித் தலைவர்களும் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்ன?
அனைவருக்கும் நன்றி சொல்லி இருக்கின்றேன். அவர்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஏற்று நான் செயல்படுவேன். ஒத்துழைப்புத் தரவேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர்களிடத்தில் எடுத்து வைத்திருக்கின்றேன்.
இந்த நாளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆறாவது முறையும் தலைவர் கருணாநிதி ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருந்த அந்த ஆசை நிறைவேறாமல் போனது. இன்றைக்கு நிறைவேறி இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்று குறிப்பிட்டார்.
Comment