கிண்ணியாவின் முதல் இலக்கியகர்த்தா 'அண்ணல்' என்ற புனைபெயரைக் கொண்ட மர்ஹூம் எம்.எஸ்.எம். ஸாலிஹ் அவர்களாவர். 1930.10.08ஆம் திகதி மர்ஹூம்களான முகம்மது சுல்தான் (கொஸ்தாப்பள்) - ஹயாத்தும்மா தம்பதிகளின் கடைசி மகனாக பெரிய கிண்ணியாவில் இவர் பிறந்தார்.
பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் முருகுப்பிள்ளை வாத்தியார் என கிண்ணியா மக்களால் அழைக்கப்பட்ட அமரர் காசிநாதர் அவர்களது மாணவர் குழாத்தினருள் ஒருவர்.
1953ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டதன் மூலம் ஆசிரியராக தொழில் புரிந்தார். இதன் மூலம் கிண்ணியாவின் மூன்றாவது முஸ்லிம் ஆசிரியர் என்ற பெருமை இவருக்குள்ளது.
அம்பாறை சாலம்பைக்கேணி தமிழ் வித்தியாலயத்தில் தமிழ் மொழி ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற இவர் மதவாச்சி, சிலாபம் போன்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் அதிபராகப் பணியாற்றியுள்ளார். கிண்ணியாவில் குட்டிக்கராச்சி இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம், அல் அக்ஸா கல்லூரி, வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் அதிபராகப் பணியாற்றி கல்விச் சேவைகள் புரிந்துள்ளார்.
பாடசாலைக் காலத்தில் அதாவது இவரது 15வது வயதில் 1945ஆம் ஆண்டு இவரது முதலாவது கவிதை 'அவள்' என்ற தலைப்பில் அச்சு வாகனமேறியது. அதனைத் தொடர்ந்து பல கவிதைகளை இவர் எழுதத் தொடங்கினார். தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகத் திகழ்ந்த பத்திரிகைத்துறை ஜாம்பவான் என அழைக்கப்படும் அமரர் எஸ்.டி.சிவநாயகம் இவரது கவிதைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தார்.
இந்தவகையில் கிண்ணியாவின் முதல் இலக்கியகர்த்தா என்ற பெருமை இவருக்குண்டு. மர்ஹூம் அண்ணல் வெறும் எழுத்தோடு மட்டும் நிற்கவில்லை. மாலை வேளைகளில் கடற்கரைகளில் இலக்கியச் சந்திப்புக்களை ஏற்படுத்தி கவியார்வத்தை ஏனையோருக்கு ஏற்படுத்தும் பணியையும் முன்னெடுத்தார்.
1964ஆம் ஆண்டு முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் இடம்பெற்ற முதலாவது இஸ்லாமிய கலை, இலக்கியப் பெருவிழாவின் போது இவரது கவிதை நூல் 'அண்ணல் கவிதைகள்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இந்நூலில் 'இறைவணக்கம்' என்ற தலைப்பு முதல் 'சிரிக்கிறேன்' என்ற தலைப்பு வரை 43 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. எம்.ஏ.றஹ்மான் தலைமையில் இயங்கிய அரசு வெளியீட்டகத்தினால் இந்நூல் வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டகத்தின் முதலாவது தனிப்பாடற் தொகுதி இதுவென அதன் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வ.அ.இராசரெத்னம், மகாகவி, நீலாவணன், புரட்சிக்கமால், எஸ்.பொன்னுத்துரை, திமிலைத்துமிலன், கலாநிதி எம்.ஏ.நுஹ்மான், கவிச்சுடர் அன்பு முகையதீன், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர்.எஸ்.சதாசிவம், பேராசிரியர் சு. வித்தியாநந்தன் போன்றோரின் இலக்கிய நட்பு இவருக்குக் கிடைத்தது. இவர்களோடு அடிக்கடி இலக்கிய சந்திப்புக்களையும் இவர் ஏற்படுத்தியிருந்தார்.
காதல் கவிதையோடு அவரது இலக்கியப் பயணம் ஆரம்பித்தாலும் சமயம் சார்ந்த பல கவிதைகளையும் அவர் யாத்துள்ளார். 'நபிகள் காவியம்' என்ற இலக்கியத்தினை செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறையடி எய்தினார். இதனால் அவரது இந்த முயற்சி முற்றுப் பெறாமல் போய்விட்டது.
தமிழ் ஆசானான இவர் அதற்கேற்றாற் போல் ஆடை அணிவதில் அதிக கரிசனை காட்டினார். மடிப்புக்குலையாத ஆடை அணிவதில் அவர் வல்லவர். அவர் பூசும் வாசணைத் தைலங்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மனமகிழ்வை ஏற்படுத்தும். கம்பீரமான நடை, உடை, பாவனை உள்ள அவர் உயரமான தோற்றமும், வலுவான உடற்கட்டும் உடையவராக விளங்கினார் என அவரது மாணாக்கர்களுள் ஒருவரான மர்ஹூம் பேராசிரியர் கே.எம்.எச்.காலிதீன் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் அண்ணல் கவிதையோடு சிறுகதை எழுதுவதிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். இவர் எழுதிய 'மனிதன்' என்ற சிறுகதை 1961 இல் மரகதம் சஞ்சிகையில் வெளியாகியது. அவர் 1974இல் இறையடி எய்திய போது யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையினால் வெளியிடப்படும் யாழ்பிறையில் மறுபதிப்பாகவும் இச்சிறுகதை வெளிவந்தது. அவ்வாண்டுக்கான யாழ்பிறை ஆசிரியராக இருந்த மூதுரைச் சேர்ந்த கலாபூஷணம் எம்.எஸ்.அமானுள்ளாஹ் இந்தச் சிறுகதையை மறுபதிப்பாக வெளியிட்டார். இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துவதாக இக்கதை அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
கவிஞர் அண்ணலது கவிதைகள் தேசிய மட்டத்தில் இடம்பிடித்திருந்தன. இதனால் க.பொ.த (உயர்தர) தமிழ் பாடத்தில் இவரது 'மனிதா நீ யார்' என்ற இவரது கவிதை சேர்க்கப்பட்டிருந்தது. ஈழத்துக் கவிதை வளர்ச்சி தொடர்பாக படிப்போர் இவரையும் இவரது கவிதைகளையும் படிக்கும் நிலை இன்றும் உள்ளது.
மூதூர்க் கோட்டத்தின் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரியாக இருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த மர்ஹூம் வை.அகமது இவரது கவிதைகள் தொடர்பான ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.
கவிஞர் அண்ணலை நினைவுகூரும் வகையில் கிண்ணியாவில் 'அண்ணல் நூலகம்' என்ற பெயரில் நூலகம் ஒன்று தாபிக்கப்பட்டது. மர்ஹூம் பேராசிரியர் கே.எம்.எச்.காலிதீன் தலைமையிலான குழுவினர் இந்நூலகத்தை தாபித்தனர்.
இதனைவிட இவரை நினைவுகூரும் வகையில் கிண்ணியா, மாஞ்சோலைச்சேனையில் ஒரு வீதிக்கு 'அண்ணல் வீதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள வீதி எம்.எஸ்.எம்.சாலிஹ் வீதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல சின்னக்கிண்ணியா பகுதியில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு 'அண்ணல்நகர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கிண்ணியாவின் முதல் இலக்கிய கர்த்தாவான மர்ஹூம் அண்ணலுக்கு கிண்ணியாவில் வழங்கப்பட்டுள்ள கௌரவங்கள் இவை. ஏனைய பிரதேசங்களுக்கு இவை முன்னுதாரணம் என்று கூடச் சொல்லலாம்.
பாத்தும்மா பீவி இவரது வாழ்க்கைத்துணைவி. சித்தி சஹீனா, சித்தி ஜெசீமா (ஆசிரியை), றியாழ் (விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்), றக்கீப் (பொறியியலாளர்), முனீரா (ஆசிரியை), சித்தி சபீக்கா (ஆசிரியை), நளீம் (திடீர் மரண விசாரணை உத்தியோகத்தர்), மிஸ்காத் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
மார்க்க விடயங்களில் கூடுதல் ஈடுபாடுள்ள கவிஞர் அண்ணல் தனது 44வது வயதில் 1974ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டும் பிரிந்தார். இவரது ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அவரது சிந்தனைகள், எழுத்துக்கள் என்பன இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
தேடல்:
ஏ.சி.எம்.முஸ்இல்
Comment