Wednesday, 15, Oct, 1:08 PM

 

 
 
கிண்ணியாவின் பத்திரிகைச் செய்தியாளர்களாகப் பணியாற்றியவர்களுள் முதலாமவர் மர்ஹூம் எம்.ஏ.எம்.யூசுப் அவர்களாவர். இவர் 1927.07.20 இல் பெரிய கிண்ணியாவில் மர்ஹூம்களான முஸ்தபா ஆலிம் - கதீஜா உம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
 
அப்போது கிண்ணியா மகளிர் கல்லூரியின் ஒரு பக்கத்தில் இயங்கிய பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்று சிரேஷ்ட தகைமை (எஸ்.எஸ்.சீ) சான்றிதழ் பெற்றார். இவர் தமிழ் மொழியில் அதிக புலமை பெற்றிருந்தார்.
 
மூதூர்த் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.ஈ.எச். முகம்மது அலி இவரது சகபாடியாவார். இதனால் மர்ஹூம் அலி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட 1952 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் மூதூர்த் தொகுதிக்கான செய்தியாளர் நியமனத்தை இவருக்கு பெற்றுக் கொடுத்தார்.
 
இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது பத்திரிகையாளர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். இப்பகுதி தகவல்கள் மற்றும் பிரச்சினைகளை எழுதி அவற்றை வெளியே கொண்டு வந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் இவர் பாரிய பங்களிப்புச் செய்தார். 
ஏதாவது பொறுப்பு எடுத்தால் அதனை முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடைய இவர் நிருபர் பணியைத் திருப்திகரமாக தன்னால் செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். இதனால் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் தனது செய்தியாளர் பதவியை இராஜினாமாச் செய்தார்.
 
இவரது திருப்திகரமான சேவையைக் கருத்தில் கொண்டு தினகரன் பத்திரிகை நிறுவனம் இவருக்கு நற்சான்றிதழ் ஒன்றை வழங்கியது.
 
கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராகச் சில வருட காலம் பணியாற்றிய இவர் பின்னர் சின்னக்கிண்ணியா பகுதியில் வியாபார முயற்சியில் ஈடுபட்டார். 1984.01.13 ஆம் திகதி முதல் சின்னக் கிண்ணியா பகுதிக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமனம் பெற்ற இவர் 1996 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்து வந்தார். அரசியல் காரணங்களுக்காக இப்பதவி இவரிடமிருந்து மீளப் பெறப்பட்டது. 
 
தற்போது கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் இயங்கும் இடத்தின் ஒரு பகுதி இவருடைய தந்தையாரின் காணியாகும். பாடசாலைக்காக இவர் அக்காணியை அன்பளிப்புச் செய்திருந்தார்.
 
இவர் கற்கின்ற காலம் முதல் தமிழ் இலக்கண, இலக்கியத்தில் புலமை பெற்றிருந்ததால் இவருக்கு கற்பித்த யாழ்ப்பாண ஆசிரியர்கள் இவரை 'பண்டிதர்' என்று அழைத்தனர். இவர் இறக்கும்வரை இச்சிறப்புப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தார். இப்போது இப்பெயர் இவரது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கும் சிறப்புப் பெயராகப் பயன்படுத்தப் படுகின்றது.
 
எங்களது வீட்டுக்கு சற்று அயலில் இவரது வீடு இருந்ததால் சிறு வயது முதல் இவரோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சாந்தமான குணமும், அமைதியான போக்கும் உடைய இவர் நிதானமாக உரையாடுவார். 
 
இவர் ஒரு முறை சொன்ன விடயம் இன்றும் எனது ஞாபகத்தில் உள்ளது.
 
நாயறு 
திங்க
சே. 
பொத
விசாலமா
வெளிக்காட்டாம
சனியன
 
கிழமை நாட்களை இலகுவாக ஞாபகப் படுத்துவதற்காக இவர் கையாண்ட உத்தி தான் இது. 
 
அப்துல் ஹமீது சுபைதா உம்மா இவரது வாழ்க்கைத்துணைவி. மஹ்ரூப் (கூட்டுறவுச்சங்க முன்னாள் ஊழியர்), முபாரக் (டைலர்), கஸ்ஸாலி, மன்சூர் அலி, மர்ஹூம் அஷ;ரப், சியாத் பதுர்நிசா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
தனது 81 வயதில் 2008.05.13 ஆம் திகதி இவர் காலமானார். இவரது ஜனாஸா றஹ்மானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

தேடல்:

ஏ.சி.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners