Tuesday, 28, Nov, 4:37 PM

 

நானும் ஜெயிக்க வேண்டும் என்னையும் இந்த உலகம் “இத்தனை நாள் இவன் எங்கிருந்தான்…..என்ற படி ஒர் நாள் திரும்பிப் பார்க்க வேண்டும்…நானும்’ ஒரு ஸ்டார் செலிபிரிட்டியாக மாற வேண்டும் என்ற வெறியோடு அதனை மாத்திரமே மனதில வைத்துக் கொண்டு அதற்காக சதாவம் உசிரைக் கொடுத்து நம்பிக்கையோடு கடினமாக உழைக்கின்ற மனிதர்களே இங்கே ஜெயிக்கின்ற ரேஸிங் குதிரைகளாகின்றார்கள்..
மாற்றமாக சும்மா அநியாயத்துக்கு வெட்டியாகப் பேசிக் கொண்டு அரட்டையும் குறட்டையுமாக, அடுத்தவர்களை கண்ட மேனிக்கு விமர்சித்துக் கொண்டு தானாக கிடைப்பதனை இது போதும் எனக்கு இது போதுமே என்ற பயந்தாங்கொள்ளி மனோ நிலையோடு சுவாசத்தையே சுமையாக பார்க்கப் பழகி விட்ட எவரேஜுக்கும் கீழானவர்கள்தான் எப்போதுமே தோத்தாங் கோழிஸ்…
கீழே வருகின்ற தற்போதைய இந்திய பெண்கள் ஹொக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலின் இன்ஸ்பயரிங் நீண்ட ஸ்டேரிரையை கொஞ்சம் வாசியுங்கள். புரியும். ஜெயிக்க வேண்டுமென்ற உண்மையான வெறியும் அதற்கான உழைப்பும் மட்டுமே வெற்றியின் அடிப்படை ரிஸிப்பி………………….ஓர் நாள் வரும்..அப்போது இந்த உலகம் உங்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கும்.
ராணி ராம்பால் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குருஷேத்திர மாவட்ட ஷஹபாத் மார்க்கண்டாவில் பிறந்தவர். அவரே சொல்லுகின்ற அவரது கதையை கொஞ்சம் கேட்போம்.
அதற்கு முன்னர் கொசுறாக ஒரு செய்தி. 2010ம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண ஹொக்கி போட்டிகளில் தனது பதினைந்தாவது வயதிலேயே மிகக் குறைந்த வயதில் இந்திய தேசிய அணியில் விளையாடியவர் என்ற சாதனையை இவர் நிகழத்தினார். தற்போது வயது இருபத்தாறு.
இனி அவரது இன்ஸ்பயரிங் ஸ்டோரி.
“துயரங்களடங்கிய எனது வாழ்விலிருந்து நான் தப்பிக்க விரும்பினேன். மின்சார வசதிகள் இல்லா நிலையிலிருந்து ஒரு நாளில் இரு நேரச் சாப்பாடென்கின்ற நிலையிலிருந்து, நுளம்புகள் தொந்தரவு தருகின்ற கொடுமைமிக்க இரவுகளிலிருந்து மழை நாட்களில் வெள்ளத்தில் மூழ்கிப் போகின்ற எனது வீட்டின் அவலங்களிருந்து, நான் எப்படியாவது தப்பிக்க விரும்பினேன். எனது தந்தை வண்டியிழுப்பவர். தாயோ வீட்டு வேலைக்காரி.
எனது வீட்டுக்கு அண்மையில் ஒரு ஹொக்கி எக்கடமி இருந்தது. அங்கே வீரர்கள் பிராக்டிஸ் பண்ணுவதனை நான் மணிக் கணக்கில் ஆர்வமாக பார்த்துக் கொண்டேயிருப்பேன். நானும் ஹொக்கி விளையாட வேண்டுமென்று கடுமையாக ஆசைப்பட்டேன். அப்பாவின் நாளாந்த வருமானம் வெறுமனே எண்பது ரூபாய்தான். ஆகக் குறைந்தது எனக்காக ஒரு ஹொக்கி ஸ்டிக்கை அவரால் வாங்கிக் கொடுக்க முடியாத அவலம். ஒவ்வொரு நாளும் எனக்கும் ஹொக்கி கற்றுக் கொடுங்கள் என்று கோச்சிடம் சென்று நான் கேட்பேன். ஆனால் கோச் நான் போஷணைக் குறைபாட்டோடு இருந்ததன் காரணமாக எனது வேண்டுகோளை நிராகரித்தார். “பயிற்சியில் கலந்து கொள்ளுவதற்கு உனக்கு போதுமான உடற் பலம் கிடையாது” என்றார்.
வயலில் நான் ஒரு உடைந்த ஹொக்கி ஸ்டிக்கை ஒரு நாள் கண்டெடுத்தேன். அதனைக் கொண்டு அங்கேயே நானாக பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னிடம் பயிற்சிக்கான பிரத்தியேகமான ஆடைகள் இருக்கவில்லை. சல்வார் கமீசணிந்தே பயிற்சிக்காக அங்குமிங்கும் ஓடினேன். என்னை நான் இந்த உலகத்துக்கு நிரூபித்தேயாக வேண்டுமென்ற வேட்கையோடும் பூட்கையோடுமிருந்தேன். கோச்சிடம் சென்று எனக்காக ஒரு வாய்ப்பு வழங்குங்கள் என்று கெஞ்சி அழுதேன். அவர் இறுதியில் ஒத்துக் கொண்டார் எனக்கு பயிற்சி வழங்க.
இது பற்றி எனது குடும்பத்திடம் தெரிவித்த போது அவர்கள் ஆரம்பத்தில் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பயந்தார்கள்.. “நான் ஒரு வேளை இதில் தோற்றால் நீங்கள் சொல்லுகின்ற படி நடந்து கொள்ளுகின்றேன்” என்றேன். இறுதியாக விருப்பமில்லாமல் நான் ஹொக்கி விளையாட ஒத்துக் கொண்டார்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கே பயிற்சிகள் ஆரம்பித்து விடும். எங்கள் வீட்டில் அப்போது நேரம் பார்க்க ஒரு மணிக் கூடு கூட இருக்கவில்லை. எனவே எனது அம்மா நேரகாலத்தோடு எழுந்து நான் கண் விழிப்பதற்கான நேரம் வந்து விட்டதா என்பதனை அறிய ஆகாயத்தை பார்ப்பவராக இருந்தார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் 500 மில்லி லிட்டர் பால் கொண்டு வர வேண்டுமென்பது எக்கடமியில் கட்டாயமாக இருந்தது. எனது குடும்பமோ எனக்கு 200 மில்லி லீட்டர் தருகின்ற அளவுக்கே இருந்தனர். எனவேதான் நான் அந்த 200 மில்லி லீட்டர் பாலில் தண்ணீரைக் கலந்து கொண்டு எக்கடமிக்கு வந்தேன். ஏனெனில் நான் ஹொக்கி ஆட வேண்டுமென்ற வெறி மட்டுமே எனக்குள்ளே இருந்தது.
எல்லா நேரங்களிலும் எனது கோச் எனக்கு ஆதரவாக இருந்தார். எனக்காக ஹொக்கி கிட் மற்றும் சப்பாத்துகளை வாங்கிக் கொடுத்தார்.அவரது குடும்பத்தோடு தங்கியிருந்து எனது உணவு விடயங்களை கவனிக்க அனுமதியளித்தார். கடுமையாக உழைத்தேன். நான் ஒரு நாள் கூட பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறியது கிடையாது.
முதன் முதலாக நான் சம்பாதித்த அந்த 500 ரூபா எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கின்றது. ஒரு சுற்றுப் போட்டியில் ஜெயித்ததற்காக எனக்கு சம்பளமாக ரூபா. 500 கொடுத்தார்கள். அதனைக் கொண்டு போய் எனது அப்பாவிடம் கொடுத்தேன். இதற்கு முன்னர் தனது கைகளால் அவர் 500 ரூபாவினை தொட்டது கூடக் கிடையாது. “ஒரு நாள் வரும் அப்போது நான் உங்களுக்காக சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவேன்” என்று எனது பெற்றோரிடம் நான் அப்போது வாக்குறுதியளித்தேன். அந்த இலக்கை நோக்கி இன்னுமின்னும் நான் கடினமாக உழைத்தேன்.
எனது மாநில அணியில் இடம் கிடைத்து மாநில அளவிலும் ஏனைய பல சாம்யன்ஷிப் போட்டிகளிலும் கலந்து கொண்ட பின்னர் எனக்கு பதினைந்து வயதாக இருக்கின்ற போது நான் தேசிய அணிக்காக அழைக்கப்பட்டேன். அப்போது கூட எனது உறவினர்கள் எப்போது நான் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன் என்பதனையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனது அப்பா என்னிடம் தொடர்ந்து என்னை விளையாடுமாறு ஊக்குவித்தார். எனது குடும்பத்தின் ஆதரவோடு இந்தியா அணிக்காக நான் எனது ஆட்டத்தில் கடுமையாக கவனம் செலுத்தி உழைத்தேன். இறுதியாக இந்திய பெண்க்ள ஹொக்கி அணியின் தலைவியாக ஆனேன்.
அதன் பின்னர் நான் ஓர் நாள் வீட்டில் இருக்கின்ற போது எனது அப்பாவுடன் பணி புரிகின்ற ஒரு வயதானவர் தனது பேத்தியுடன் எனது வீட்டுக்கு வந்தார். “இவள் உன்னால் பயங்கரமாக ஈர்க்கபட்டிருக்கின்றாள். உன்னைப் போலவே ஹொக்கி ஆட வேண்டுமென்று ஆசைப்படுகின்றாள்” எனன்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அழுது விட்டேன்.
2017ம் ஆண்டு, எனது குடும்பத்துக்காக சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினேன். நாங்கள் ஆளையாள் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தோம். நான் செய்ய வேண்டியது இன்னும்; நிறைய இருக்கின்றது. இந்த வருடம் (2021) டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் பெற வேண்டும். அதுதான் இப்போதைய இலக்கு” என்கின்ற இந்திய பெண்கள் ஹொக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலின் இன்ஸ்பயரிங் ஸ்டோரி ஈர்க்கின்றது.
கிண்ணியா சபறுல்லா காசிம்
2021-08-07

Comment

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners