
கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரைக்காயர் சேகப்துல்லாஹ் - காதர் மஸ்தான் சுலைஹா உம்மா தம்பதிகளின் 7 வது குழந்தையாக கிண்ணியா அடப்பனார் வயலில் பிறந்தார்.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவ் வேளையில் இவரது குடும்பம் குறிஞ்சாக்கேணியில் குடியேறியது. இதனால் 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் கற்றார்.
பின்னர் 6 ஆம் வகுப்புக்காக மீண்டும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் சேர்ந்து க.பொ.த (சா.த) தரம் வரை அங்கு கற்றார். அப்போது இப்பாடசாலையின் அதிபராக கந்தளாயில் வசித்து வரும் திருமதி ஆமினா ஸாலிஹ் அவர்கள் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
பெண்கள் அதிகம் கற்கத் தேவையில்லை என்று கருதிய அக்காலத்தில் அதிபர் ஆமினா சாலிஹ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 1966 இல் க.பொ.த (சா.த) பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தார். இவரோடு இப்பரீட்சைக்கு தோற்றிய நால்வருள் இவர் மாத்திரமே சித்தியடைந்திருந்திருந்தார்.
1971.09.01 இல் இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது ஆசிரியை என்ற பெருமையை இவர் பெற்றுக் கொள்கின்றார்.
1974 – 1975 காலப்பகுதியில் அளுத்கம ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்றார். இதனால் கிண்ணியாவின் முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியை என்ற பெருமையும் இவருக்குண்டு.
பயிற்சியின் பின் 1976இல் மீண்டும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நியமிக்கப்பட்டார். அதிபர்களான செல்வி. செல்வமணி வடிவேலு, திருமதி சித்தி பரீதா சாலிஹ் ஆகியோரின் சிறந்த நிர்வாகத்தின் கீழ் ஆசிரியையாகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி இசட்.எம்.எம்.நளீம், டாக்டர் இர்பானா யூசுப் போன்றோர் இக்காலப் பகுதியில் இவரது மாணவிகளாக இருந்தனர்.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திலிருந்து 1983 இல் குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்ற இவர் 1996 வரை அங்கு ஆசிரியையாகக் கடமையாற்றினார்.
1997.01.01 இல் குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலத்திலிருந்து மாணவிகளைப் பிரித்து குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது அதிபராக இவர் கடமையைப் பொறுப்பேற்றார்.
இப்பாடசாலைக்கு நல்லதொரு ஆசிரியர் குழாம் அமைந்தது. பாடசாலை வளர்ச்சிக்கு இவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினர். இதனை விட பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர், கல்வி அலுவலகம் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்பும் இவருக்கு கிடைத்தது. இக்காலப்பகுதியில் நானும் இங்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளேன்.
சில புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றோடு போட்டியிட்டு பல வெற்றிகளை இப்பாடசாலை பெற்றது.
இக்காலப் பகுதிகளில் சிறந்த பெறுபேறுகளையும் இப்பாடசாலை பெற்று வந்தது. இன்றும் கூட இந்தப் பெறுபேற்று வீதங்கள் இப்பாடசாலையில் முறியடிக்கப்படாத சாதனைகளாக உள்ளன.
இங்கு கற்ற பலர் பட்டதாரிகளாக, கல்வியிற் கல்லூரி டிப்ளோமாதாரிகளாக உள்ளனர். அந்தளவுக்கு சிறப்பான அடித்தளம் இவரது நிர்வாகக் காலப்பகுதியில் இடப்பட்டது.
சுமார் முப்பத்தாறரை வருடங்கள் கல்விப் புலத்தில் பணியாற்றிய இவர் பத்தரை வருடங்கள் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். 2008.03.04ஆம் திகதி இவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஜனாப். அப்துல் ஸலாம் (மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் எம்.பியின் சகோதரர்) இவரது வாழ்க்கைத் துணைவராவார். முகம்மது றியாட் (மல்டிலக் சிரேஷ்ட முகாமையாளர்), சித்தி மிஸ்றியா, சித்தி பாயிஸா (ஆசிரியை), சித்தி பாஹிமா, முகம்மது நளீஜ் (நீதிச்சேவை முகாமைத்துவ உதவியாளர் - முதூர் நீதிமன்றம்) ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
தற்போது குறிஞ்சாக்கேணி நெனசல நிலையத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வரும் இவர் தையல் பயிற்சி, மனையியல் பயிற்சி, கணனிப் பயற்சிகளைப் பெறும் மாணவிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.
தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment