
கிண்ணியாவின் முதலாவது விஷேட கலைப்பட்டதாரி மர்ஹூம் அல்ஹாஜ் மௌலவி துணைப்பேராசிரியர் கே.எம்.எச்.காலிதீன் அவர்களாவார். கிண்ணியாவின் தெற்கேயுள்ள ஈச்சந்தீவு கிராமத்தில் 1944.07.14ஆம் திகதி மர்ஹூம்களான குஞ்சு முகம்மது ஹாஜியார் - ஹாஜியானி பொன்னும்மா தம்பதிகளின் இளைய மகனாக இவர் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியாலயத்தில் கற்ற இவர் கிண்ணியா மத்திய கல்லூரியில் இடைநிலைக்கல்வியை கற்கும் போது சஹ்தியா அறபுக்கல்லூரியில் மார்க்கக் கல்வியையும் கற்று மௌலவி சான்றிதழ் பெற்றார். பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் உயர்தரம் கற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார் அங்கு பொதுக்கலைத் தேர்வு வரை கற்ற இவர் அறபு மொழியில் விசேட கற்கையை மேற்கொள்வதற்காக பேராதனைப் பல்கலைக் கழகம் சென்றார்.
பேராசிரியர் எஸ்.ஏ இமாம், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி போன்றோர் இவரது ஆசான்கள். 1970 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஷேட கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இந்தவகையில் கிண்ணியாவில் விஷேட கலைமாணிப் பட்டம் பெற்ற முதலாமவராக இவர் திகழ்கின்றார்.
கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் 1971 முதல் 1976 வரை பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 1976 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இக்காலப் பகுதியில் பலாலி ஆசிரியர் கலாசாலையின் பகுதிநேர விரிவுரையாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றார். 1989ஆம் ஆண்டு துருக்கி இஸ்தான்பூல் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். எனவே, கிண்ணியாவின் முதலாவது முதுமாணியும், முதல் கலாநிதியும் என்ற அந்தஸ்தும் இவருக்குண்டு.
1990ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் இருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இணைப்புச்செய்யப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் நலன்பேணும் இணைப்பதிகாரியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இம்மாணவர்களின் நலன் பேணல் விடயங்களில் முடியுமான அளவு பணியாற்றினார்.
1999ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரப் பீடாதிபதியாக நியமனம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் பீடாதிபதி என்ற பெருமையையும் இவர் பெருகின்றார். 2008ஆம் ஆண்டு துணைப் பேராசிரியர் நியமனம் இவருக்கு கிடைக்கிறது. இதனால் கிண்ணியாவின் முதல் துணைப் பேராசிரியாகவும் இவர் வரலாற்றில் பதியப்படுகின்றார்.
எழுத்துத் துறையிலும் மிகுந்த ஈடுபாடுள்ள இவர் 14 நூல்கள் எழுதியுள்ளார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இஸ்லாமிய நாகரீகம், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் கல்விப் பணிகள் என்பன அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. இதனைவிட இலங்கை மற்றும் சர்வதேச மட்டத்தில் நடந்த மாநாடுகள் பலவற்றில் பல ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.
பல்வேறு பொதுப்பளிகளும் செய்துள்ள இவர் பேராதனை, கொழும்பு பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் தலைவர், செயலாளர் பணிகளையும் ஆற்றியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழக மஜ்லிஸ் தலைவராக இருந்த காலத்தில் தான் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி அங்கு முதன்முதலாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் இவரை அங்கு ஜூம்ஆ பிரசங்கம் மேற்கொண்டார்.
அகில இலங்கை இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம், அகில இலங்கை கதீப்மார் சம்மேளனம் ஆகியவற்றின் ஆரம்ப கர்த்தா இவராவார். அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கான அறபுமொழி பாடத்திட்டத்தை இவர் எழுதிக் கொடுத்தார். அதேபோல இஸ்லாமிய நாகரிகம் பாடத்தை மாணவர்கள் கற்பதிலுள்ள இடர்பாடுகளை இவர் நீக்கி பலமாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வழிகாட்டினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிவாயல்களில் கடமை புரிந்து வந்த கதீப்மார்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இவரது தலைமையிலான கதீப்மார் சம்மேளனம் பெரும் பணியாற்றியுள்ளது.
கிண்ணியாவிலும் இவரது பொதுப்பணிகள் அதிகம் உள்ளன. கவிஞர் அண்ணல் அவர்களின் ஞாபகர்த்தமாக அண்ணல் நூலகம் இவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் அக்காலத்தவர்களின் வாசிப்பு மட்டம் மேலோங்கியது.
கிண்ணியா வரியிறுப்பாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாவாகவும் இவர் காணப்படுகின்றார். உள்ளூராட்சி மன்றங்களுக்கு வரி செலுத்தும் மக்களை அங்கத்தவர்களாகக் கொண்ட இச்சங்கத்தின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் சேவை மக்களுக்கு திருப்தியாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இது போன்ற சங்கங்கள் இப்போது கிண்ணியாவில் இல்லை
தற்போது முனைச்சேனையில் தலைநிமிர்ந்து நிற்கும் சுமையா மகளிர் அறபுக்கல்லூரியின் ஆரம்பகர்த்தாக்களுள் முக்கியமானவராகவும் இவர் இருந்தார். ஒரு கட்டத்தில் இம்மத்ரசா இயங்குவதற்கு தற்போது HNB க்கு அருகிலுள்ள தனது வீட்டை வாடகை எதுவுமின்றி வழங்கினார்.
இவரது பொதுப் பணிகளை நன்றியோடு நினைவுகூரும் வகையிலேயே எம்.எஸ்.தௌபீக் எம்.பியினால் மணியரசம்குளம் பகுதியில் 'கலாநிதி கே.எம்.எச்.காலிதீன் வித்தியாலயம்' ஆரம்பிக்கப்பட்டது.
கிண்ணியா மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.எம்.சரீபு அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும் போது 'நானும் மர்ஹூம் காலிதீனும் சகபாடிகள். அவர் மீத்திறனுள்ள ஒரு மாணவரல்ல. எனினும் அவரது அயரா முயற்சி அவரை இந்தளவுக்கு உயர்த்தியது' என்று கூறுவார். அந்த வகையில் இன்றைய மாணவர் சமூகத்திற்கு முன்னுதாரணம் இவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாவதற்கு களம் அமைத்துக் கொடுத்தவர் இவராவார். இவர் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் முஸ்லிம் காங்கிரஸ் பிரகடனப் படுத்தப்பட்டது.
இக்கட்சியின் ஸ்தாபகப் பிரதித் தலைவராகவும், திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்ட இவர்தான் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசை முதன்முதல் அறிமுகம் செய்து வைத்தார்.
முகம்மது இப்ராஹீம் ஐனுன் துஹ்பா இவரது துணைவியாவார். சஹ்ரா பதூல், நூறுல் சிபாயா (ஆசிரியை), ரைசுதீன் (தென்கிழக்கு பல்கலைக்கழ ICT அலுவலர்), கலாநிதி பஹ்ருதீன் முகம்மது, ஜமால்தீன் முகம்மது, முகம்மது ரபியுதீன், ஐனுல் ராபியா, பாயிஸ்தீன் (சிறுவர் உரிமை மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர்), பாயிஸா, நூர்ஜஹான், மின்ஹா (முகாமைத்துவ உத்தியோகத்தர்) ஆகியோர் இவரது பிள்ளைகள்.
2010.07.07ஆம் திகதி ஆம் திகதி கொழும்பில் இவர் காலமானார். இவரது ஜனாஸா கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment