Thursday, 23, Mar, 12:57 AM

 

 
 
கிண்ணியாவிலிருந்து முதலாவது மாவட்ட அமைச்சர் நியமனம் பெற்றவர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களாவர். இவர் 1939.01.05ஆம் திகதி மர்ஹூம்களான எகுத்தார் ஹாஜியார்- ஜொஹரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராக பெரிய கிண்ணியாவில் பிறந்தார். 
 
இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை மாத்தளை சாஹிராக் கல்லூரியிலும், உயர்கல்வியை கண்டி சென் அந்தனீஸ் கல்லூரியிலும் கற்றார். 
 
தனது 25வது வயதில் அரசியலுள் நுழைந்த இவர் 1964ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிண்ணியா பட்டின சபைத் தேர்தலில் போட்டியிட்டார். பெரியாற்றுமுனை வட்டாரத்தில் வெற்றி பெற்ற இவர் பட்டின சபைத் தலைவரானார். 
 
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூதூர்த் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். அதன்பின் 1989ஆம் ஆண்டு முதலாவது விகிதாசாரத் தேர்தல், 1994 இல் நடந்த இரண்டாவது விகிதாசாரத் தேர்தல் ஆகியவற்றிலும் வெற்றி பெற்றார்.
 
1980 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட அமைச்சராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து ஒரு மாவட்ட அமைச்சராக நியமனம் பெற்ற முதலாமவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். 
 
1989 ஆம் ஆண்டு துறைமுகங்கள், கப்பற்றுறை இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவில் கட்டங் கட்டமாக அரசியலில் உயர்வு பெற்ற முதலாமவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
இவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இவரது ஆரவாரமற்ற அமைதியான போக்கு காரணமாக அவை பெரிதாக ஜனரஞ்சகப் படுத்தப் படவில்லை.
 
கல்வித் துறையைப் பொறுத்தவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 22 புதிய பாடசாலைகள் இவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 3 பாடசாலைகள் பெண்கள் பாடசாலைகளாகும். 3 பாடசாலைகள் இவர்களது குடும்பக் காணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது இவர்களது குடும்பத்துக்குரிய சிறப்பம்சம். 
 
14 பாடசாலைகள் இவரால் தரமுயர்த்தப் பட்டுள்ளன. 32க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கட்டட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர பல பாடசாலைகளுக்கு ஏனைய கற்றல் உபகரணங்கள் புறக்கிருத்திய உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
 
ஓன்று கூடல் மண்டபம், மாணவர் விடுதிகள், நிர்வாகக் கட்டடம், விஞ்ஞான ஆய்வு கூடம், தொழில்நுட்பக் கூடம், ஆசிரியர் விடுதிகள், பெவிலியன் என்பன போன்ற வசதிகளும்; பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளன.
 
கிண்ணியாப் பாடசாலைகள் முன்னர் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தின் கீழும், பின்னர் மூதூர்க் கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுமே நிர்வகிக்கப்பட்டு வந்தன. அப்போது பிரச்சினை மிகுந்த காலகட்டமாக இருந்ததால் கிண்ணியா அதிபர், ஆசிரியர்கள் மூதூருக்கு சென்று வருவதற்கும், மூதூர் கல்வி அதிகாரிகள் கிண்ணியாவுக்கு வருவதற்கும் பெருஞ் சிரமங்களை அனுபவித்து வந்தனர்.
 
இதனால் சகல அதிகாரங்களும் கொண்ட கிண்ணியாக் கோட்டக் கல்வி அலுவலகம் 1991ஆம் ஆண்டு இவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வைபவத்துக்கு அப்போதைய கல்வி அமைச்சர் லலித் அத்துலத் முதலி வருகை தந்திருந்தார்.
 
1988 ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த ஆசிரியர்கள் கட்டாயம் 21 தினங்கள் சேவை முன்பயிற்சி பெற வேண்டும் என்ற நியதி அப்போது இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் நியமனம் பெற்ற சுமார் 400 ஆசிரியர்களுக்கு அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கிண்ணியாவிலும், திருகோணமலையிலும் இந்த சேவை முன்பயிற்சிகள் நடத்த இவர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
 
கிண்ணியாவில் இலங்கை மின்சார சபை உப அலுவலகத்தை தாபித்தமை, உப பஸ் டிப்போவை தாபித்தமை, குறிஞ்சாக்கேணி மற்றும் மகருகிராமம் உப தபால் அலுவலகங்களை தாபித்தமை, கிண்ணியாவுக்கு குழாய் நீர் வசதியை ஏற்படுத்தியமை, பல கிராமங்களில் மின்சார விஸ்தரிப்புச் செய்தமை, விவசாய மற்றும் மீன்பிடி அபிவிருத்தி போன்ற பல சேவைகள் இவரால் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
 
கிண்ணியாப் பாலத்துக்கான செலவு மதிப்பீடு மேற்கொள்வதற்காக கடலுக்கடியிலான மண் பரிசோதனை இவரது முயற்சியினாலேயே 1993 - 94 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.  இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய பாலத்துக்கான செலவு மதிப்பீடு செய்யப்பட்டு பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
 
இவரது சேவை இன, மத, மொழிகளுக்கு அப்பால் பட்டதாக இருந்ததால் எல்லா இன மக்களினதும் ஆதரவு இவருக்கு இருந்தது. குறிப்பாக பௌத்த மதகுருமார் கூட இவருக்கு ஆதரவு வழங்கினர். தேர்தல் காலங்களில் இவரது வெற்றிக்காக அவர்கள் உழைத்துள்ளனர்.
 
கிண்ணியாவைப் போல மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கந்தளாய், திருகோணமலை, குச்சவெளி, நிலாவெளி, இறக்கண்டி, புடைவைக்கட்டு, புல்மோட்டை, ரொட்டவௌ போன்ற பல்வேறு பகுதிகளிலும் இவரது சேவைகள் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன.
 
மூதூர் மக்களின் அப்போதைய போக்குவரத்து நலன்கருதி கப்பல் வசதி, ஜெட்டி நிர்மானம் போன்றவற்றில் கனிசமான பங்களிப்பு இவர் செய்துள்ளார்.
 
1977 ஆம் ஆண்டு முதல் 1997 இல் மரணிக்கும் வரை தொடர்ந்து 20 வருடங்கள் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அந்த வகையில் கிண்ணியாவில் கூடுதல் காலம் எம்.பியாக இருந்த முதலாமவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
 
மிகவும் அமைதியான போக்கு, பொறுமை, நிதானம் போன்றன இவரிடமிருந்த மிகப் பெரிய மூலதனங்களாகும். யார் என்ன கதைத்தாலும் இவரிடமிருந்த பொறுமை காக்கும் பண்பு மக்கள் மத்தியில் இவரது அபிமானத்தை மேலும் வளர்த்தது. 
 
நேர முகாமைத்துவத்துவத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்த இவர் தனது வேலைகளுக்காக அடுத்தவர்களை நம்பியிருக்காது தானே செய்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். உதவிக்கு வேறு யாரும் இல்லாத வேளையில் சில அவசரக் கடிதங்களை இவரே தட்டச்சு செய்து எடுத்துக் கொள்வார்.
 
ஆங்கிலத்தில் புலமையுள்ள இவர் கடிதங்களை நிதானமாக தயாரிப்பதில் கண்ணுங் கருத்துமாக இருப்பார். தான் தயாரித்த ஒரு சில கடிதங்களை இவர் திருத்தியதை மர்ஹூம் ஹம்ஸா ஆசிரியர் என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்.
 
ஆவனப் படுத்தும் ஆர்வம் இவரிடம் அதிகமாக இருந்தது. இதனால் பேப்பர் கட்டிங் உள்ளிட்ட பல விடயங்களை இவர் சேகரித்து வைத்திருந்தார். பல அரும்பெரும் புகைப்படங்கள் இவரது பாதுகாப்பில் இருந்திருக்கின்றன. 
 
யாருடனும் முரண்பட்டுக் கொள்ளும் பண்பு இவரிடம் இருக்காததால் எல்லா அரசியல்வாதிகளும் இவர்மீது விருப்பங் கொண்டிருந்தனர்.
 
சகாப்தீன் கதிஜம்பு இவரது வாழ்க்கைத் துணைவியாவார். ஹலினா, ரோஹினா, இம்ரான் மஹ்ரூப் எம்.பி ஆகியோர் இவரது பிள்ளைகள்.
 
பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துக் கொண்டிருந்த காலத்தில் அதாவது 1997.07.20 ஆம் திகதி இறக்கக்கண்டி மக்களின் துயர்துடைக்க செல்லும் வழியில் ஆயுததாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது காலமான கிண்ணியாவின்  முதலாமவரும் இவரே.
 
அன்னாரின் ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் பெருந்திரளான மக்கள் பிரசன்னத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
 
 
தேடல் 
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners