Tuesday, 28, Nov, 3:55 PM

 

 
கிண்ணியா மாஞ்சோலைச்சேனையைச் சேர்ந்த கவிஞர் அப்துல் முத்தலிப் அப்துல் கஹ்ஹார் 1934.07.19இல் பிறந்தவர். சின்னக் கிண்ணியா அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை (தற்போதைய அல் அக்ஸா கல்லூரி), பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் லிகிதராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 
இவர் மூதூர் உமர்நெய்னாப் புலவரின் மாணாக்கர்களுள் ஒருவர். புலவர் சின்னக்கிண்ணியா அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்பித்த வேளையில் அவரிடம் இவர் பாடம் கற்றுள்ளார். விளையாட்டுத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி பரிசு பெற்றுள்ளார்.
1948இல் சிறுவர் பாடல் எழுதியதன் மூலம் தனது 14வது வயதில் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். வள்ளல், அண்ணல்தாசன், ஆனாக்கானா, கிண்ணியூரான், மாஞ்சோலைக் கவிராயர் போன்ற புனைபெயர்களிலும் கவிதைகள், சிறுவர் பாடல்கள் எழுதியுள்ளார். இஸ்லாமியக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 
 
வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. கிண்ணியாவில் வெளியிடப்பட்டுள்ள பல சிறப்பு மலர்களை இவரது கவிதைகள் அலங்கரிக்கின்றன. இலங்கை வானொலியில் இவரது கவிதைகள் பல ஒலிபரப்பாகி உள்ளன.
 
பிரதேச, மாவட்ட, தேசிய மட்டங்களில் நடந்த பல்வேறு கவிதைப் போட்டிகளில் இவரது கவிதைகள் வெற்றி பெற்றுள்ளன.  பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரதேசங்களிலும், மாவட்ட மற்றும் தேசிய மட்டத்திலும் இவர் கௌரவிக்கப் பட்டுள்ளார்.
 
இவரது முதலாவது நூல் நற்பண்பும் நபிமொழியும். இது 1992இல் வெளியானது.  இதனைத் தொடர்ந்து அண்ணல் மாநபி பிறந்தனரே, அப்துல் கஹ்ஹார் கவிதைகள், அதிசயம், நபிகள் நாயகரின் நான்மணிக்கடிகை, சீலர் நபியின் சிறு பஞ்சமூலம், வற்சையர் வடிதமிழ் போன்றன இவரால் வெளியிடப்பட்ட கவிதை நூல்களாகும்.
 
இந்தியா தஞ்சாவூர் இதய கீதம் அமைப்பு இவருக்கு தமிழருவி பட்டம் வழங்கிக் கௌரவித்தது. இதேபோல புலவர்மணி, கலாமணி, கலாஜோதி ஆகிய பட்டங்களும், கலாசார அலுவலல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருதும், கிழக்கு மாகாண ஆளுநர் விருதும் இவர் பெற்றுள்ளார். 
 
2008ஆம் ஆண்டு கிண்ணியா பிரதேச செயலக சாகித்திய விழாவில் கவிப்பரிதி பட்டமும், விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதேபோல கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரினால் கலைஞர் சுவதம் என்னும் வாழ்த்தும் பெற்றுள்ளார்.
 
2002 இல் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கௌரவிக்கப்பட்டுள்ளார். 2004 இல் காத்தான்குடியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பொற்கிழி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
மிகவும் அமைதியான போக்குள்ள இவர் பிறர் மனம் நோகாத வகையில் நடந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர். 
 
தற்போது சிறிது உடல்நலக்குறைவாக இருந்தாலும் எழுதுவதை இன்னும்  கைவிடவில்லை. இவரது எழுத்துக்களும் என்றும் பேசப்படும்.
 
 
தேடல்:
 
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners