Tuesday, 28, Nov, 3:34 PM

 

 
 
 
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டதை அனைவரும் அறிவோம். இதன் போது 'உயிர்த்திரள்' என்ற பெயரில் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
 
ஆண்டு விழாக்கள் கொண்டாடுவது, நினைவு மலர்கள் வெளியிடப்படுவது என்பன மிகவும் வரவேற்கத்தக்கவை. ஏனெனில் அவை வரலாற்றுப் பதிவுகளாகும். இதன்மூலம் பல  தகவல்கள் நிகழ்காலத்தில் அனைவருக்கும் பகிரப்படுகின்றது. தெரியாதவர்களும் பல்வேறு விடயங்களைத் தெரிந்து கொள்கின்றார்கள்.
 
இந்த விழாவின் போது வெளியிடப்பட்ட 'உயிர்த் திரள்' நினைவு மலர் கூட ஒரு வரலாற்று ஏடு. எதிர்கால சந்ததிக்கு பல தகவல்களை எத்திவைக்கும் ஒரு ஆவணம். எனவே, இது போன்ற முயற்சிகள் அனைவராலும் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவை. 
 
ஒரு வரலாற்று மலரை வெளியிடுபவரோ அல்லது வரலாற்றுக்கட்டுரை எழுதுபவரோ காய்தல் உவத்தல் இன்றி உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும். தான் எடுத்துக் கொண்ட தலைப்பு தொடர்பான சகல விடயங்களையும் தேடிப் பெற வேண்டும். இது தான் யதார்த்தம். 
 
இந்த உயிர்த் திரள் நினைவு மலரில் எச்.எம்.ஹலால்தீன் அவர்களால் 'கிண்ணியா வலயக் கல்வி அலுவலகமும் அதன் வரலாறும்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை பல்வேறு தகவல்களை சொல்ல மறந்துள்ளது. எனவே, அனைவரும் இந்த தகவல்களை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மறக்கப்பட்ட சில விடயங்களைச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
 
1998ஆம் ஆண்டு நாடு முழுவதும் வலயக் கல்வி முறை அமுல்படுத்தப்பட்ட போதே கிண்ணியாவுக்கும் தனி வலயம் வேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டமும் ஆரம்பமானது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் பாடசாலைகளை ஒரு வார காலம் பகிஸ்கரித்தனர். சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. மிதவைப்பாதைச் சேவை இடைநிறுத்தப்பட்டது. அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்லவில்லை. 
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நஜீப் ஏ மஜீத், ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோர் கிண்ணியாவுக்கு கல்வி பெறுவது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 
1999ஆம் ஆண்டு கிண்ணியா பட்டின சபை மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ;ரப் 'சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் கிண்ணியா கல்வி வலயம் பெற்றுத்தரப்படும்' என உறுதியளித்தார். (2000 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்ததார்)
 
கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் மர்ஹூம் ஈ.எம்.மெய்யதீன், பிரதேச சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், முன்னாள் காதி நீதவான் எம்.எஸ்.ஏ.ஹாதி, பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கூட்டத்தீர்மானத்தின்படி தனிக் கல்வி வலயத்துக்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
 
கிண்ணியாவிலுள்ள ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து கிண்ணியாவுக்கு தனி கல்வி வலயம் பெறுவது தொடர்பான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அந்தவகையில் கிண்ணியா  சுதந்திர ஆசிரியர் சங்கம் சார்பாக மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர், எம்.எச்.ஏ.ஹஸன், அதிபர் சங்கச் செயலாளர் வீ.எம்.மூமின், ஸ்ரீலங்கா முஸ்லிம் ஆசிரியர் காங்கிரஸ் சார்பாக என்.ஆதம்பாவா, ஏ.ஸீ.எம்.முஸ்இல் (கட்டுரையாளர்) ஆகியோர் கடந்த 1999 ஆகஸ்ட் மாதம் அப்போதைய வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் அசோக ஜெயவர்த்தனவை சந்தித்து வலயம் தொடர்பான கோரிக்கையை முன் வைத்தனர். அவர் இக்கோரிக்கையை இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்வைத்தார்.
இதே தூதுக்குழு அப்போதைய மாகாணக் கல்வி அமைச்சு செயலாளர் சுந்தரம் திவகாலாலாவை சந்தித்து இதே கோரிக்கையை முன் வைத்தது. கிண்ணியாவுக்கு தனிக் கல்வி வலயம் வரும்வரை கிண்ணியாவில் இயங்கிய உப வலயக் கல்வி அலுவலகத்தை முழு அதிகாரம் கொண்ட அலுவலகமாக இயங்க அவர் ஏற்பாடு செய்து தந்தார்.
 
இவை உயிர்த் திரள் சொல்ல மறந்த எனக்கு தெரிந்த வலயக் கல்வி அலுவலகம் பெறுவது தொடர்பான முன்னெடுப்புக்கள். இவை போன்ற இன்னும் இருக்கலாம். 
 
அதேபோல புதிய பாடசாலை ஆரம்பிப்பதற்கோ, பாடசாலைத் தரமுயர்விற்கோ ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபார்சு மிக முக்கியம். எனவே, பாடசாலை ஆரம்பிப்பு, தரமுயர்வு தொடர்பாக எழுதும் போது அதனோடு சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயரையும் சேர்த்திருந்தால் அது அவருக்கு வழங்கப்பட்ட கௌரவமாக இருந்திருக்கும் என்பது எனது பணிவான கருத்து.
 
- ஏ.ஸீ.எம்.முஸ்இல் - 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners