ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வேயிலுள்ள ‘சொம்மாரோயி’ என்ற தீவு,
காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாக விளங்குகின்றது. ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே இருக்கும். அதேபோல் ஆண்டின் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கும். அதன்படி தற்போது அந்த தீவில் சூரியன் மறையாத காலம். அங்கு கடந்த மாதம் 18ஆம் திகதி நள்ளிரவு சூரியன் மறையாத காலகட்டம் தொடங்கியது.
அடுத்த மாதம் (ஜூலை) 26ஆம் திகதி வரை 69 நாள்களுக்கு இப்படித்தான் இருக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கிறது. தங்களது வழக்கமான நேரத்தைக் கடைப்பிடித்தல் முறைகளிலிருந்தும் விடுபடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களது தீவை உலகின் முதல் நேரமற்ற மண்டலமாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரையும் அணுகி தங்களது கோரிக்கையை எடுத்துரைத்துள்ளனர். இதுகுறித்து சொம்மாரோயி தீவில் வசிக்கும் ஒருவரான கேஜெல் ஓவ் ஹெவ்டிங் கூறுகையில், “இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயமும் கூட. கடிகார இயக்கத்தை நிறுத்தி வைப்பதே இதற்கு சரியான தீர்வு” எனக் கூறியுள்ளார்.
Comment