ஆக்ரா உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உபி-இல் மர்மக் காய்ச்சலால் 40 குழந்தைகள் உட்பட 68 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியது. கொரோனாவால் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஏற்படும் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசம்
இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக மர்ம காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் குழந்தைகளிடமே இந்த மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அதீத காய்ச்சல், நீரிழப்பு மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையில் திடீர் குறைவு ஆகியவை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு டெங்கு அறிகுறிகள் தென்படுகின்றன. சிகிச்சை போது பலர் வரிசையாக உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது.

ஒரே நாளில் 12 குழந்தைகள் பலி
இந்த மர்ம காய்ச்சலில் இருந்து குணமடைய 10 நாட்கள் வரை சிகிச்சை தேவைப்படுகிறது. குழந்தைகள் என்றால் இதிலிருந்து குணமடைய 2 வாரங்களுக்கு மேல் ஆகிறது. மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆக்ரா, மதுரா மெயின்புரி, எட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக ஃபிரோசாபாத் மாவட்டத்தில் இந்த பாதிப்பு மிக மிக மோசமாக உள்ளது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 குழந்தைகள் இந்த மர்ம காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். இதுவரை உபி-இல் மர்ம காய்ச்சலால் 40 குழந்தைகள் உட்பட 68 பேர் பலியாகியுள்ளனர்.

என்ன காரணம்
ஃபிரோசாபாத் மாவட்டத்தில் தற்போது 135 பேர் இந்த மர்ம காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 72 குழந்தைகளின் நிலை மிக மோசமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிராமப் புறங்களிலேயே இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சிறப்புச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தேவையான மருந்துகளுடன் கிராமப்புறங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும், அதில் பெரியளவில் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை. மேலும், கிராமங்களில் வீடுகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழப்போரின் தகவல் உபி அரசிடம் இல்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெளியில் மற்றும் ஈரப்பதம் அதிகமாக உள்ள பகுதிகளில் வைரஸ் எளிதாகப் பரவும் இந்த மர்ம காய்ச்சலும் இது போன்ற பகுதிகளிலேயே அதிகமாக ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொடர்பு இல்லை
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 குழந்தைகள் இந்த மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், காய்ச்சல் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இருப்பினும் இதுவரை கொரோனாவுக்கும் இந்த மர்ம காய்ச்சலுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மர்ம காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வருவோர் கொரோனா வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் உயிரிழப்புகள் ஏன் ஏற்படுகின்றன என்பது குறித்து உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் உயிரிழந்த சிலருக்கு இணை நோய்கள் இருந்ததாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
(INDIAN MEDIA)
Comment