Tuesday, 28, Nov, 4:39 PM

 

 
கிண்ணியாவின் முதல் புவியியல்துறை விசேட பட்டதாரி மர்ஹூம் யூ.முகைதீன்பாவா அவர்களாவார். 1947.11.24 ஆம் திகதி கிண்ணியாவின் தெற்கேயுள்ள பூவரசந்தீவுக் கிராமத்தில் மர்ஹூம் உமர்தீன் - சாராஉம்மா தம்பதிகளின் புதல்வராக இவர் பிறந்தார். 
 
தனது ஆரம்பக்கல்வியை பூவரசந்தீவு அல் மினா வித்தியாலயத்திலேயே கற்றார். பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்றார். 
 
சிவானந்தாவிலிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1975ஆம் ஆண்டு  புவியியல் துறையில் விசேட பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் புவியியல் துறை விசேட பட்டதாரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
 
1976 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை ஆசிரியராகப் பணி புரிந்தார். கிண்ணியா மத்திய கல்லூரி, அல் அக்ஸாக் கல்லூரி. குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார். 
 
சமூகக்கல்வி மற்றும் புவியியல் பாடங்களைப் போதித்து இப்பாடங்களில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பாடுபட்டுள்ளார். சகல மாணவர்களையும் கவரும் வகையில் கற்பிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்தது. அக்காலத்தில் கிண்ணியாவிலிருந்து அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு இவரது கற்பித்தல் பணி பெரிதும் துணைபுரிந்தது.
 
1989ஆம் ஆண்டு அல் அக்ஸா மகா வித்தியாலயம் மூலம் 'சமுகக் கல்விக்கோர் வழிகாட்டி' என்ற நூலை வெளியீடு செய்தார். க.பொ.த.(சா.த) மாணவர்களுக்கு இந்நூல் பெரிதும் துணை புரிந்தது.
 
1990 முதல் 1992 ஆம் ஆண்டு வரை சமூகக்கல்விப் பாட ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் கிண்ணியாவின் முதல் சமுகக்கல்வி பாட ஆசிரிய ஆலோகர் அந்தஸ்தும் இவருக்கு கிடைத்தது.
 
1990, 1992 ஆகிய ஆண்டுகளில் ஜனசவிய, தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் மூலம் கிண்ணியாவில் அதிகமானோருக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. இவர்களுக்கு தேசிய கல்வி நிறுவகத்தினால் தொலைக்கல்வி மூலம் கற்பித்தல் பயிற்சி வழங்கப்பட்டது. 
 
இதற்காக கிண்ணியாவில் நிறுவப்பட்ட தொலைக்கல்வி நிலையத்தின் சிரேஷ்ட போதனாசிரியராக பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1995 வரை இப்பதவியை வகித்தார். இக்காலப்பகுதியில் தனது சிறந்த கற்பித்தல் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றினூடாக பெரும்பாலும் எல்லா ஆசிரியர்களும் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற வழிசமைத்தார்.
 
1990 ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமா சான்றிதழ் பெற்ற இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெறும்வரை உதவிக்கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி ஆகிய பதவிகளை வகித்து வந்தார்.
 
இக்காலப் பகுதிகளில் பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் தன்னால் முடியுமான பங்களிப்புகளை செய்துள்ளார்.
 
எனதும் ஆசானான இவர் கல்விப் பணியில் மட்டுமன்றி பொதுப்பணிகளிலும் தனது பங்களிப்புகளைச் செய்துள்ளார். பல்கலைக்கழகக் காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட புவியியல் சங்கத்திற்கு உபதலைவராக செயற்பட்டுள்ளார்.
 
கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம், பெரியபள்ளிவாயல் பரிபாலனசபை ஆகியவற்றில் தலைவராக இருந்து பணியாற்றியுள்ள இவர் கிண்ணியா வரியிறுப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களால் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப் பட்டார். 
 
கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது நிர்வாகக் காலத்தில் கூட்டுறவுச்சங்கம் சிறப்பாக செயற்பட்டதாக சங்கத்தின் ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் தேசிய மீலாதுன்னபிவிழா நூலாக்கக் குழு, கிண்ணியா நகரசபை உருவாக்க அறிக்கைக் குழு ஆகியவற்றிலும் அங்கம் வகித்து தனது பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 
 
பிற்காலத்தில் அரசியலிலும் ஈடுபாடு காட்டிய இவர் 1994 ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை கிண்ணியாப் பிரதேசசபை உறுப்பினராக சிறப்பான பணியாற்றியுள்ளார். 
 
சித்தி மர்சுனா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். சட்டத்திரணி பஹ்மி(UK), டாக்டர் ஹில்மி, ரூமி, இஸ்மி, றில்மி, பாஹிரா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
2008.12.16 இல் இவர் இறையடியெய்தினார். இவரது ஜனாஸா பெரியகிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
கிண்ணியாவின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றிய இவருக்காகவும் பிரார்த்திப்போமாக.
 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners