Thursday, 30, Nov, 10:09 PM

 

 
கிண்ணியாவின் முதல் ஜனாதிபதி சட்டத்தரணி ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆம் திகதி மாலிந்துறையில் பிறந்தார்.
 
தனது ஆரம்பக்கல்வியை கந்தளாய் சிவன்கோவில் பாடசாலை (தற்போது விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம் (அப்போது கிண்ணியா மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் இயங்கியது) ஆகியவற்றில் கற்றார். 
 
இடைநிலைக் கல்விக்காக கிண்ணியா மத்திய கல்லூரியில் சேர்ந்து அங்கு க.பொ.த. (சாதாரண தரம்) வரை கற்றார். 1971 இல் இப்பாடசாலையில் க.பொ.த (சா.த) வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 22 மாணவர்கள் இப்பிரிவில் கல்வி கற்றனர். 11 பேர் பரீட்சை எழுதினர். இவர்களுள் சித்தியடைந்தவர் இவர் மட்டுமே.
 
பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் உயர்கல்வி கற்று அங்கிருந்து கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்திற்குத் தெரிவானார். 1979 இல் சட்டமாணியாக (LLB) பட்டம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் சட்டமாணியாகவும், திருகோணமலை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் சட்டமாணியாகவும் இவர் திகழ்கின்றார்.
 
1981.03.16 இல் சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்ட இவர் மறுநாளே கிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தில் தனது சட்ட தொழில் பயணத்தை ஆரம்பித்தார். திருகோணமலை, கந்தளாய், மூதூர் நீதிமன்றங்களில் இவர் ஆஜராகி வருகின்றார். தற்போது திருகோணமலை மாவட்டத்தில் எல்லா வகை நீதிமன்றங்களிலும் தோன்றும் சிரேஷ்டமானவராக இவரே இருக்கின்றார்.
 
சுமார் 40 வருட சட்டத்துறை அனுபவம் கொண்ட இவர் மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் இதுவரை 4500 க்கு மேற்பட்ட வழக்குகளில் ஆஜராகி பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
 
கைதுக்குப்பின் பிணை வழங்கும் சட்ட ஏற்பாடு இருப்பது போல கைதுக்கு முன், முன்பிணை வழங்கும் சட்ட ஏற்பாடும் உண்டு. இந்த சட்ட ஏற்பாட்டுக்கமைய சுமார் 20 வருடங்களுக்கு முன் ஒருவருக்கு முன்பிணை பெற்றுக் கொடுத்ததன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் முன்பிணை பெற்றுக் கொடுத்த முதலாமவராகவும் இவரே திகழ்கின்றார்.
 
2019 ஆம் ஆண்டு இவர் ஜனாதிபதி சட்டத்தரணியாகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
 
கிழக்கு மாகாணத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு அடுத்த முஸ்லிம் ஜனாதிபதி சட்டத்தரணி இவர். அதேபோல திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி ஜனாதிபதி சட்டத்தரணியான முதலாமவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. 
  
சட்டத்துறை சம்பந்தமான பல்வேறு தேடல்கள் உள்ள இவர் உயர் நீதிமன்ற  வழக்குகள் பலவற்றின் தீர்ப்புச்சட்டங்களை தன்னகத்தே தொகுத்து வைத்துள்ளார். தனது வெற்றிகளுக்கு இது போன்ற தேடல்கள் மிகுந்த பங்களிப்பைச் செய்துள்ளதாக இவர் குறிப்பிடுகின்றார். இளம் சட்டத்தரணிகள் பலர் இவரிடம் இருந்து பல்வேறு விடயங்களைக் கற்று வருகின்றனர்.
 
மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராக இருந்த காலத்தில் சில வருட காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இவர் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய முதலாமவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
 
தனது சட்டத்தொழிலுக்கு மேலதிகமாக பொதுப்பணிகள் பலவற்றிலும் இவர் ஈடுபட்டுள்ளார். அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணியின் தேசிய உப தலைவராகப் பணியாற்றியுள்ளார். 
 
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தொடர்ந்து 4 தடவைகள் பணியாற்றி இருக்கின்றார். அதேபோல கிண்ணியா மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
 
முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீது அவர்களை அடிக்கடி இவர் நினைவு கூர்கின்றார். பாடசாலைக் காலத்தில் தனக்கெதிராக உருவாக்கப்பட்ட பிரச்சினையொன்றைத் தீர்த்து வைத்து தடங்களில்லாமல் கல்வி கற்க அவர் உதவி செய்ததாகவும், கொழும்பு சாஹிராவில் கல்வி கற்ற காலத்தில் புத்தகங்கள் வாங்கித் தந்து தன்னைப் படிக்கத் தூண்டியதாகவும் குறிப்பிடுகின்றார்.
 
நகைச்சுவையாகப் பேசும் தன்மை கொண்டவர். மற்றவர்களது கவலையைப் போக்கி சிரிக்க வைக்கும் தன்மை கொண்டவர். இவரோடு பயணஞ் செய்தால் பயண அலுப்பே தெரியாது. 
 
தற்போது மார்க்க விடயங்களில் கூடுதல் ஈடுபாடுள்ள இவர் தனது முகநூல் பக்கமூடாக பல்வேறு ஞாபகப்படுத்தல்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றார்.
 
உம்முசுரைக் இவரது வாழ்க்கைத் துணைவியாவார். பயாஸ் அஹ்மத், பஸீல்  அஹ்மத், பஸ்மி அஹ்மத், சட்டத்தரணி சித்தி சௌமியா, சட்டமாணி நிஹால் அஹ்மத் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர். 
 
இன்னும் நீண்ட காலம் தனது பணியைச் செய்து சமூகத்திற்கு தேவையான வழிகாட்டல்களை இவர் வழங்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners