
கிண்ணியாவின் முதல் முறைசாரா உதவிக்கல்விப் பணிப்பாளர் மர்ஹூம் ஏ.எச்.எம்.ஜகுபர் அவர்களாவார். இவர் மர்ஹூம்களான அப்துல் ஹமீது – சதக்கும்மா தம்பதிகளின் புதல்வராக 1951.07.18இல் குட்டிக்கரச்சையில் பிறந்தார்.
குட்டிக்கரச்சை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும், கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். 1968இல் க.பொ.த (சா.த) சித்தியடைந்த இவரால் இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை.
இதனால் 1971இல் கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தில் எழுதுனராக இணைந்து கொண்டார். பின்னர் காசாளராகவும் பணியாற்றினார். 1979இல் பொது முகாமையாளராகப் பதவி உயர்வு பெற்று சங்கத்தின் வளர்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்றினார்.
இவ்வாறான பின்னணியில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் 1981இல் க.பொ.த (உ.த) பரீட்சைக்கு வெளிவாரியாகத் தோற்றினார். அந்தப் பரீட்சை பெறுபேறு மூலம் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகி 1985 இல் கலைமாணிப் பட்டம் பெற்றார். இதன் மூலம் கல்விக்கு வயது மற்றும் குடும்பச்சுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்தார்.
1985இல் சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். இரு வருடங்கள் உள்ளூராட்சி மன்றங்களில் இந்தப் பதவியை வகித்தார்.
1987 இல் பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்று குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றினார். 1994 பட்டப் பின் கல்வி டிப்ளோவை நிறைவு செய்தார்.
1998 இல் நடைபெற்ற ஆசிரிய ஆலோசகர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக்கல்வி ஆசிரிய ஆலோசகராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது முறைசாரக்கல்வி ஆசிரிய ஆலோசகர் என்ற கௌரவத்தைப் பெற்றார்.
அப்போது மூதூர் கல்வி வலயம் அதிகமான பாடசாலைகளைக் கொண்டிருந்தது. இந்தப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு தனது பணியை சிறப்பாக முன்னெடுத்தார்.
2010ஆம் ஆண்டு கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் என்ற பெருமையையும் பெறுகின்றார்.
இக்காலப் பகுதியில் பாடசாலையை விட்டு விலகியோருக்கு சுயதொழில் பயிற்சி நெறிகளை ஒழுங்குசெய்து கொடுத்து பலர் நன்மையடைய வழிவகுத்தார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
நிறையவே வாசிக்கும் பண்பு கொண்ட இவர் பல நூல்கள், சஞ்சிகைகளை வாசித்துக் கொண்டிருப்பார். சுய தேடல் மூலம் தனது அறிவு மட்டத்தை அதிகரித்துக் கொண்டார். மார்க்கத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் தனது ஓய்வு நேரங்களில் பள்ளியில் அதான் சொல்லும் பணியை முன்னெடுத்து வந்தார்.
சித்தி பளீலா உம்மா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். றிஸ்வான் (முகாமைத்துவ உதவியாளர்), றசீன், இம்தியாஸ் (மானி வாசிப்பாளர்), றசீதா றம்சானி, நுஸ்லா பானு (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் இவரது பிள்ளைகள்.
இவர் 2015.11.01 இல் காலமானார். இவரது ஜனாஸா கிண்ணியா பொது மையவாடியில் நவல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவருடைய மறுமை வாழ்வுக்காகவும் பிரார்த்திப்போம்.
தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment