கிண்ணியாவின் முதல் வெளிவாரிப்பட்டதாரி முகம்மது சரீப் அவர்களாவர். இவர் சாகுல் ஹமீத் - மைமூனும்மா தம்பதிகளின் மகனாக 1942.12.01 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் இயங்கிய ஆண்கள் பிரிவில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார்.
1971.09.01 ஆம் திகதி கிண்ணியா அல் ஹிரா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக நியமனம் பெற்றார். 1973 – 74 ஆம் கல்வியாண்டில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார்.
அதன்பின் மொரவௌ பிரதேசத்தில் உள்ள நல்லகுட்டியாறு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் சுமார் ஒரு மாத காலம் கற்பித்தார்.
1975.02.02இல் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார். இவர் 2002 இல் ஓய்வு பெறும் வரை சுமார் 27 வருடங்கள் இப்பாடசாலையில் ஆசிரியர், பகுதித் தலைவர், பிரதி அதிபர், அதிபர் எனப் பல கடமைகளைப் புரிந்துள்ளார்.
2000.12.23 முதல் 2002.11.30 வரை இப்பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். இந்த வகையில் கிண்ணியா மத்திய கல்லூரியின் 26 வது அதிபர் இவராவார்.
1985இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகக் கற்று கலைமானிப்பட்டம் பெற்றார் இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது வெளிவாரிப் பட்டதாரி இவராவார்.
மிகவும் சாந்தமான குணம் கொண்ட இவர் பாடசாலை வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் எல்லோருடனும் மிகவும் அன்பாக பழகி வந்தார். தனது கற்பித்தல் காலத்தில் இவர் லீவு எதுவும் எடுப்பதில்லை. தொடர்ச்சியாக 5 வருடம் எவ்வித லீவும் பெறாது கற்பித்தவர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சமூக சேவையில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் கிண்ணியா ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவராவார். இந்த வகையில் இதன் ஸ்தாபகத் தலைவர் இவர். இதேபோல பெரிய பள்ளிவாயல் பரிபாலன சபைச் செயலாளராகவும், கிண்ணியா பள்ளிவாயல் சம்மேளனத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
சுமையா மகளிர் அறபுக் கல்லூரியின் நிர்வாகத்தில் நீண்ட காலம் செயலாளராக செயற்பட்டு வந்த இவர் 2006 முதல் இன்று வரை அதன் தலைவராகப் பணி புரிந்து வருகின்றார். கிண்ணியா பைத்துஸ் ஸக்காத் அமைப்பிலும் நீண்ட காலம் பணியாற்றிய இவர் ஸக்காத் நிதியை சேகரித்து உரியவர்களுக்கு பகிர்ந்தளித்ததில் பெரும் பங்கு வகித்துள்ளார். இவை போல இன்னும் பல சமுக மட்ட அமைப்புகளிலும் பணிபுரிந்துள்ளார்.
வாசிப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் ஏராளமான நூல்கள் வாசித்துள்ளார். புதிய நூல்கள் வெளிவருகின்ற போது அதனைக் முதன்முதல் கொள்வனவு செய்பவராகவும் இவர் திகழ்ந்தார். இவரது வீட்டில் பெரியதொரு நூலகம் இருந்தது. இது போன்ற பெரிய வீட்டு நூலகம் கிண்ணியாவில் வேறு எங்கும் இல்லை என்று துணிந்து கூறலாம்.
இவரிடம் நூல்கள் இரவல் பெறுவோர் அதனை மீள ஒப்படைக்காததால் தற்போது இவரது வீட்டு நூலகம் சோபை இழந்து காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
கிண்ணியாவின் வரலாற்றை தொகுப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பல்வேறு சிறப்பு மலர்களில் கிண்ணியாவின் வரலாற்றுத் துளிகளைப் பதிவு செய்துள்ளார். தற்போது திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை நூலாக வெளியிடுவதில் ஈடுபாடு காட்டி வருகின்றார். இதில் பெருமளவு பணி நிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிடுகின்றார்.
சம்சுல்பேகம் இவரது வாழ்க்கைத் துணைவியாவார். முகம்மது நவீத், முகம்மது ஸாஹிர் ஆகியோர் இவரது பிள்ளைகள்.
தற்போது சிறிது உடல்நலக் குறைவாக இருக்கின்ற இவரது உடல் ஆரோக்கியத்துக்குப் பிரார்த்திப்போம்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment