
கிண்ணியாவின் முதல் சமுகசேவை உத்தியோகத்தர் எம்.எம்.அப்துல்லாஹ் அவர்களாவர். இவர் மௌலவி முகம்மது மதார் (தமீம் மௌலவி) தம்பதிகளின் புதல்வராக 1959.02.01 இல் பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் இயங்கிய பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்றார். பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்று பொதுப் பரீட்சைக்குத் தோற்றினார்.
1980 இல் பொது இலிகிதராக அரச சேவையுள் நுழைந்தார். 1985 வரை திருகோணமலை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அதன் பின்னர் கிண்ணியா பிரதேச செயலகத்தில் பணிபுரிந்தார்.
1986 காலப்பகுதியில் கிண்ணியா உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றிய ஜனாப். எம்.ஐ.ரபீக் வறுமை நிவாரண உணவு முத்திரைப்பொறுப்பு உத்தியோகத்தராக இவரை நியமித்தார். சுமார் 34 கோடி ரூபா பெறுமதியான வறுமை நிவாரண முத்திரைகளை விநியோகிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனை மிகவும் திருப்திகரமான முறையில் இவர் முன்னெடுத்தார்.
இதனால் 1986 இல் கந்தளாய் குளம் உடைப்பெடுத்ததால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட முத்திரைப்பொறுப்பு, 1987- 88 காலப்பகுதியில் மூதூர் அகதிகளுக்கான முகாம் மேற்பார்வைப் பொறுப்பு என்பன இவருக்கு வழங்கப்பட்டது.
1992 இல் நடைபெற்ற போட்டிப்பரீட்சையின் மூலம் சமுக சேவை உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் சமுகசேவை உத்தியோகத்தர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
1996 – 1998 காலப்பகுதியில் கொழும்பு தேசிய சமுகவியல் அபிவிருத்தி நிறுவனத்தில் கற்று சமுகசேவையில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
1993 முதல் 2013 வரை சுமார் 20 வருட காலம் கிண்ணியா பிரதேச செயலகத்தில் சமூக சேவை உத்தியோகத்தராகப் பணிபுரிந்துள்ளார்.
சமூக சேவை திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கான சுயதொழில் திட்டத்தை மிகவும் சிறப்பாக செய்தார். 1994 காலப்பகுதியில் கிண்ணியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூகசேவைப் பணிகளை முன்னெடுப்பதில் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
அதேபோல 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற சூறாவளி, 2004 சுனாமி போன்ற அனர்த்த காலங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதில் சமுகசேவை திணைக்களத்தின் மூலம் தனது பங்களிப்புகளைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
2007 இல் பிரதேச செயலகப் பிரிவுகளில் சமுகப் பராமரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. நடுத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட கிண்ணியா சமுகப் பராமரிப்பு நிலையம் இவரது பொறுப்பின் கீழ் வழங்கப்பட்டது.
2013 இல் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் மாவட்ட சமுகசேவை உத்தியோகத்தர் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சமூகசேவை விடயங்களை மேற்பார்வை செய்து வந்த இவர் 2019 இல் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
நிஹ்மத் ஜாரியா இவரது வாழ்க்கைத் துணைவியாராவார். அரூஸா (ஆசிரியை), அர்சித் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
தனது ஓய்வுக்குப் பின்னர் விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றார் அமைப்பை தாபித்து அதில் முக்கிய பொறுப்பேற்று தற்போதும் செயற்பட்டு வருகின்றார்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment