Thursday, 23, Mar, 1:47 AM

 

 
 
கிண்ணியாவின் முதல் பட்டதாரி மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களாவார். இவர்.மர்ஹூம்களான அப்துல் லெத்தீப் (விதானையார்) – ராபியா உம்மா தம்பதிகளின் தலைமகனாக 1932.11.15 ஆம் திகதி பெரியகிண்ணியாவில் பிறந்தார்.
 
பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், திருகோணமலை இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி ஆகியவற்றில் தனது இடைநிலை மற்றும் உயர் கல்வியையும் கற்றார். தனது பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்காக 1955 இல் இந்தியாவின் பூனா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். 1958 ஆம் ஆண்டு தனது கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்து நாடு திரும்பினார். 
 
இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற பெருமையையும், கிண்ணியாவின் முதல் பட்டதாரி என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார். துணிவு, ஆளுமை, பேச்சு வல்லமை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருந்த இவர் சமூக மறுமலர்ச்சி தொடர்பான சிந்தனையையும் கொண்டிருந்தார்.
 
1959.06.01 முதல் 1959.12.21 வரை கிண்ணியா மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றினார்.  மாணவர்களின் கல்வி, ஒழுக்க விழுமியங்களில் அதிக அக்கறை செலுத்தினார். ஒரு சமுகத்தின் முன்னேற்றத்தில் கல்வி மிகவும் முக்கிய பங்காற்றும் என்பதை நன்குணர்ந்த இவர் மாலை வேளைகளில் வீதியில் வலம் வருவார். இதனால் மாணவர் யாரும் வீணாக வீதிக்கு வருவதில்லை. கல்வி தொடர்பான அக்கறையை மாணவருக்கும் பெற்றோருக்கும் ஊட்டினார். குறுகிய காலம் கல்வித்துறையில் இவர் பணியாற்றினாலும் கல்வி மறுமலர்ச்சிக்கான அடித்தளம் இவரால் பலப்படுத்தப்பட்டது.
 
இவர் இந்தியாவில் கல்வி கற்ற காலத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் பேச்சுக்களில் அதிகம் ஈர்க்கப்பட்டார். திமுக வின் அரசியல் சிந்தனைகள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. அன்று முதல் இவருக்கும் அரசியல் ரீதியான சிந்தனைகள் தோற்றம் பெற்றன. 
 
அரசியல் அதிகாரம் மூலம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இவரிடமிருந்தது. இதனால் 1960ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அப்போது மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. 
 
1960 மார்ச்சில் நடந்த 4வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். எனினும் 5வது பொதுத்தேர்தல் 1960 ஆகஸ்ட் இல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட இவர் 13,247 வாக்குகள் பெற்று மூதூர்த் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
 
1965 ஏப்ரலில் நடைபெற்ற 6வது பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இவர் 16,726 வாக்குகள் பெற்று மூதூர்த்தொகுதியின் இரண்டாவது அங்கத்தவராகத் தெரிவானார். 1970 ஜூனில்  நடைபெற்ற 7வது பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 22,727 வாக்குகள் பெற்று முதல் எம்.பியானார். இக்காலப் பகுதியிலே இவர் தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராக நியமனம் பெற்றார்.
 
இந்தவகையில் கிண்ணியாவின் முதலாவது பிரதியமைச்சர் என்ற பெருமையையும்  இவர் பெறுகின்றார். 1960 முதல் 1977 ஆம் ஆண்டு வரை 17 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக இவர் பணியாற்றியுள்ளார்.
 
இவரது அரசியல் பணியை மூன்று பெருந்தலைப்புகளின் கீழ் பார்க்க முடியும். சமூக விழிப்புணர்வு, பொதுப்பணிகள், இஸ்லாமிய தமிழ் இலக்கிய விருத்தி என்பன அவையாகும். அறிவியல் ரீதியாக தூங்கியிருந்த மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி ஏனையோரை விட நாம் சளைத்தவர்களல்ல என்ற மனப்பதிவை ஏற்படுத்தி கல்வி ரீதியாக மக்களை விழிப்படையச் செய்ததில் இவர் வெற்றி கண்டுள்ளார். அதற்கு இவரது மொழியாற்றல், பேச்சு வல்லமை என்பன உறுதுணையாக அமைந்துள்ளன.
 
பொதுப் பணிகளைப் பொறுத்தவரை விவசாயம், நீர்ப்பாசனம், வீதியபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி, ஏனைய அபிவிருத்திகள் என எல்லாத் துறைகளிலும் அது வியாபித்துள்ளது. 1974ஆம் ஆண்டு முதன் முதல் கிண்ணியாவுக்கு மின்சாரத்தைக் கொண்டு வந்தவர் இவரேயாவார். கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல கேந்திர நிலையங்கள், கிண்ணியா பிரதேச செயலகம் (அப்போது னு.சு.ழு கந்தோர்), அரச வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், மூதூர் பஸ் டிப்போ, முள்ளிப்பொத்தானை கமநல கேந்திர நிலையம் போன்றன இவரது சேவையின் நினைவுச் சின்னங்களாகும்.
 
1964, 1965 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கிண்ணியா, மூதூர், தோப்பூர் பிரதேசங்களில் இவரால் நடத்தப்பட்ட அகில இலங்கை இஸ்லாமிய கலைவிழாக்கள், தேர்தல் காலங்களில் இவரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள், பாராளுமன்ற உரைகள், மேடைப் பேச்சுக்கள் என்பன இவரது எழுத்து மற்றும் இலக்கிய ஆற்றலுக்கான உதாரணங்களாகும்.
 
தியாகி, அண்ணல் கவிதைகள், கர்பலா, மக்கள் தலைவர், அறபாத், நமது பாதை, சிந்தனைக்கோவை, நமது திட்டம் போன்ற நூல்கள் வெளிவருவதற்கு இவர் காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.
 
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம், கலாசாரம், பண்பாடு சம்பந்தமாக கூடுதல் அக்கறை செலுத்திய இவர் இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம் கிழக்கிலிருந்தே உருவாக வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்தார். இவரது சிந்தனைகளுக்கும்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்துக்கும் பெருந்தொடர்பு இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
 
அப்போதைய அரசாங்கத்தினால் இவருக்கு சில மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இவரது சிந்தனைகள் அனைத்தையும் செயலுருப்படுத்த முடியாத ஆதங்கம் இவருக்கு இருந்ததை இவரோடு நெருக்கமாக இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
 
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவர் தோல்வியடைந்த போதிலும் மக்கள் சேவையை விட்டும் ஒதுங்கி விடவில்லை. தனது இறுதி மூச்சுவரை சமூக சேவைகள் விடயத்தில் மிகுந்த பற்றுறுதியோடு செயற்பட்டு வந்தார்.
 
1953ஆம் ஆண்டு ஆசுதீன் -சல்மா பீவி (மர்ஹூம் மாஹில் ஆசிரியரின் சகோதரி) அவர்களை  தனது இல்லத்தரசியாகக் கொண்டார். ஜெஸ்மினா, சித்தி மஸாஹினா, முகம்மது நஜீப் (கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்) ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
1987.11.15 ஆம் திகதி மாலை 8.30 மணியளவில் தனது 55 ஆம் வயதில் அவரது தோனா இல்லத்தில் (தற்போதைய கிண்ணியா பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடம்) வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது ஜனாஸா பெருந்திரளான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இவர் இவ்வுலகை விட்டும் பிரிந்து 32 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அவரது பொதுச்சேவைகள் மக்களின் மனங்களில் இன்றும் ஆழப்பதிந்து காணப்படுகின்றன. 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners