Thursday, 23, Mar, 1:05 AM

 

 
கிண்ணியாவின் முதலாவது புத்தக வெளியீட்டாளர் மர்ஹூம் அல்ஹாஜ் கே.எம்.எச்.அப்துல் காதர் ஆலிம் அவர்களாவர். இவர் 1933.12.15 இல் கிண்ணியா ஈச்சந்தீவில் மர்ஹூம்களான குஞ்சு முகம்மது ஹாஜியார் - பொன்னும்மா தம்பதிகளின் தலைமகனாகப் பிறந்தார். 
 
இவர் தனது ஆரம்பக்கல்வியை அல் ரவ்லா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கிண்ணியா அல் அக்ஸாக் கல்லூரியிலும் கற்றார். கல்ஹின்னை அறபுக் கல்லூரி, காலி சோலை அறபுக் கல்லூரி ஆகியவற்றில் மார்க்கக் கல்வி கற்ற இவர் இறுதியாக புத்தளம் காஸிமிய்யா அறபுக்கல்லூரியில் கற்று மௌலவி சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
 
தான் அறபுக்கல்வி கற்கும் காலத்தில் அறபுக் கித்தாபுகளைப் பெறுவதில் பட்ட கஷ்டங்களை உணர்ந்த இவர் இதனை நிவர்த்திக்கும் பொருட்டு 1960 ஆம் ஆண்டு 'றஹ்மத்துல்லாஹ் ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் ஒரு புத்தகசாலையை கிண்ணியாவில் நிறுவினார். 
 
இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள அறபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரசாக்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றுக்கு தேவையான இஸ்லாமிய நூல்கள், கிதாபுகள், குர்ஆன் பிரதிகளை விநியோகித்து வந்தார். இதன் காரணமாக சில குர்ஆன் பிரதிகள் இவரது விற்பனை நிலையத்தின் மூலம் அச்சிட்டு வெளியிடப்பட்டன. ஏனைவை இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
 
இந்த வகையில் கிண்ணியாவின் முதல் வெளியீட்டாளர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். நம்பிக்கைச்சுடர்கள், குகைவாசிகள், பத்ர் வீரர்கள் வரலாறு, அன்புக் குழந்தைகளுக்கான அழகுத் திருப்பெயர்கள் போன்ற தமிழ் மொழியிலான நூல்கள், 5 ஜுஸ்வு, ஒரு ஜுஸ்வு போன்ற குர்ஆன் பிரதிகள் உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட நூல்கள் இவரால் வெளியீடு செய்யப்பட்டன. 
 
இவரது நூல்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சகங்களிலேயே அச்சிடப்பட்டன. கலைவாணி அச்சகம், ஞானசுரபி அச்சகம், அபிராமி அச்சகம், திருமகள் அச்சகம் போன்றன இவருக்கு நூல் அச்சிட்டுக் கொடுத்த அச்சகங்களுள் சிலவாகும். திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மூதூர் வ.அ.இராசரத்தினம் அவர்களது அமுதா அச்சகத்திலும் சில நூல்கள் அச்சிடப்பட்டன. 
 
இந்த வர்த்தகத் தொடர்பு மூலம் தமிழ் - முஸ்லிம் உறவு கலாசார ரீதியாகவும் மிகவும் சிறப்பாகப் பேணப்பட்டது.  கலைவாணி அச்சகத்துக்கு இவர் செல்லும் போது அங்கு தொழுகை நிறைவேற்றுவதற்கு இவருக்கு தனியான அறை ஒன்றை அவர்கள் ஒதுக்கிக் கொடுத்திருந்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
 
இவரது வர்த்தக நிலையத்தின் ஊடாக நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் பகுதிகளுக்கு குர்ஆன், அறபுக் கிதாபுகள், இஸ்லாமிய நூல்கள் என்பன விநியோகிக்கப்பட்டதன் மூலம் கிண்ணியாவின் பெயர் சகல முஸ்லிம் ஊர்களிலும் நிலை நிறுத்தப்பட்டது. யாராவது கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்குச் சென்று கிண்ணியா என்று சொன்னால் உங்களுக்கு றஹ்மத்துல்லாஹ் ஸ்டோர்சைத் தெரியுமா? ஏன்று கேட்குமளவுக்கு இவரது வர்த்தக நிறுவனம் மூலம் கிண்ணியா பிரபலம் பெற்றது.
 
அந்த வகையில் கிண்ணியாவின் பெயரை நாடு முழுவதும் பரப்பிய முதல் தனிநபர் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார். இதனைவிட கிண்ணியாவில் முதல் புத்தகக் கடையை நிறுவியவர், கிண்ணியாவின் முதல் இறக்குமதியாளர், தினசரி பத்திரிகைகளின் முதல் ஏஜன்ட் போன்ற பெருமைகளையும் இவர் பெறுகின்றார். 
 
நூல்கள் பெரும்பாலும் பணம் செலுத்தப்பட வேண்டிய அஞ்சல் (வி.பி.பி) மூலமே நாடு முழுவதும் அனுப்பப் பட்டன. இதனால் கிண்ணியா தபால் கந்தோரோடு நெருங்கிய தொடர்பு இவருக்கு உருவானது. நாளாந்தம் இவரது வர்த்தக நிலையத்துக்கு நூல்கள் அனுப்புமாறு கோரும் தபால்கள் வந்தன. 
 
இதனால் கிண்ணியா தபால் நிலையத்தின் தபால் தரம் பிரிக்கும் பகுதியில் றஹ்மத்துல்லாஹ் ஸ்டோர்ஸ்க்கு என தனியான ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனைவிட கிண்ணியா அஞ்சல் அலுவலகத்தின் மூலம் இவரால் நாளாந்தம் அதிக முத்திரைகள் கொள்வனவு செய்யப்பட்டதால் மாவட்டத்தில் அதிக முத்திரை விற்பனை செய்யும் தபால் நிலையங்களுள் ஒன்றாக கிண்ணியா தபால் நிலையம் மாறியது.
 
1953ஆம் ஆண்டு தனது 20வது வயதில் இவரது தந்தையுடன் இவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார். அப்போது இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்குச் சென்ற 99 பேரில் இவரே மிகவும் இளமையானவராவார். சிறிய வயதில் ஹஜ்ஜூ செய்தமையால் இவர் 'குட்டி ஹாஜியார்' என எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தார். இன்றும் இந்தப்  பெயரைக் கூறி அறிமுகப்படுத்தினால் தான் எல்லோரும் இலகுவாக இவரை அடையாளம் கண்டு கொள்கின்றனர். 
 
1960 ஆம் ஆண்டு மௌலவி ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் 1988 வரை கிண்ணியா தாமரைவில் அல்ரவ்லா வித்தியாலயம், சம்மாவச்சதீவு அஸ்ஸபா வித்தியாலயம், அல் அக்ஸாக் கல்லூரி, அல்ஹிரா மகளிர் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள், நாச்சியாதீவு, அங்குநாச்சியா போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகள் உள்ளிட்ட 8 பாடசாலைகளில் மௌலவி ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். 
 
பொதுச் சேவைகளில் கூடுதல் ஈடுபாடு காட்டி வந்த இவர் கிண்ணியா உலமா சபையில் நீண்ட காலமாக செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை வகித்துள்ளார். இக்காலப் பகுதியில் மது ஒழிப்பு விடயத்தில் பொலிசாரோடு இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
 
இதனைவிட கிண்ணியா சுமையா மகளிர் அறபுக்கல்லூரி, கிண்ணியா றஹ்மானியா பெரிய பள்ளிவாயல் ஆகியவற்றிலும் பொருளாளராகப் பணியாற்றியுள்ளார். றஹ்மானியா அறபுக் கல்லூரி, காதிரியா அறபுக் கல்லூரி ஆகியவற்றின் முக்கிய ஸ்தாபகராகவும் இவர் திகழ்ந்தார். கிண்ணியா சுமையா மகளிர் அறபுக் கல்லூரியைக் கட்டி எழுப்ப பாடுபட்ட சிலருள் இவரும் ஒருவர்.
 
சுபைதா உம்மா அவர்களை இவர் வாழ்க்கைத்துணையாகக் கொண்டார். மௌலவி முகம்மது (பாகவி), மர்ஹூம் பைசல், அஸீஸா, சாபிரா, முகம்மது முஸ்இல் (திட்டமிடல் பணிப்பாளர்), முனீரா, முஜீபா, பர்ஹான் (சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்), முபீதா, ஹஸ்ஸான் (கிராம உத்தியோகத்தர்), முபாரக்கா ஆகியோர் இவரது பிள்ளைகள்.
 
2001.02.26 ஆம் திகதி தனது 67 வது வயதில் இவர் காலமானார். இவரது ஜனாஸா றஹ்மானியா பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
(இவர் கட்டுரையாளரின் தந்தையாவார்)
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners