Sunday, 08, Sep, 7:34 PM

 

 
 
கிண்ணியாவின் முதல் சித்திரப்பாட ஆசிரியர் ஜனாப்.எம்.ஐ. முகம்மது ஸலாம் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது இஸ்மாயில் - சுலைஹா உம்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1939.01.05ஆம் திகதி சின்னக்கிண்ணியாவில் பிறந்தார்.
 
அல் அக்ஸா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியைக் கற்று எஸ்.எஸ்.சீ. பரீட்சையில் சித்தியடைந்தார் 
 
1958.06.16 இல் பெரியகிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் குறிஞ்சாக்கேணி அறபா மகாவித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா அல் அக்ஸாக் கல்லூரி, அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சித்திரப் பாட ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
 
முதல் நியமனம் தொடக்கம் சித்திரப்பாடம் கற்பித்த இவர் அட்டாளைச்சேனை, பலாலி ஆகிய ஆசிரியர் கலாசாலைகளில் கற்பித்தல் பயிற்சி பெற்றுள்ளார். சித்திரப் பாட ஆசிரியர் தட்டுப்பாடு காரணமாக ஒரே காலத்தில் கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்பித்துள்ளார்.
 
1992.04.20ஆம் திகதி கிண்ணியா அல் அதான் வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபராகக் கடமையேற்ற இவர் முதலாம் ஆண்டின் 115 மாணவர்களோடு பாடசாலையை வழிநடத்திச் சென்றார். 1999.01.05இல் ஓய்வுபெறும் வரை இங்கு கடமையாற்றிய இவர் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு நல்லதொரு அடித்தளத்தை இட்டார்.
 
இவரது அர்ப்பணிப்பான சேவை காரணமாக இவர் ஓய்வு பெறும் போது இப்பாடசாலையில் 810 மாணவர்கள் 8 ஆம் தரம் வரை கல்வி கற்றனர்.  இப்பாடசாலையின் பௌதீக வளத் தேவைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் உதவியோடு இப்பாடசாலைக்கு கட்டடம் ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.
 
அறபு எழுத்தணிக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 1400வது ஹிஜ்ரி ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய மட்டத்தில் (1979ஆம் ஆண்டு) நடத்தப்பட்ட அறபு எழுத்தணிப் போட்டியில் முதலிடம் பெற்றார். கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் இவரது கைவண்ணத்தில் உருவான அறபு  எழுத்தணி உள்ளது. அதேபோல வேறு சில பாடசாலைகளிலும் உள்ளன.
 
கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி, அல் அக்ஷhக் கல்லூரி, அல்ஹிரா மகளிர் ம.வி, அல் அதான் வித்தியாலயம். ரீ.பி.ஜாயா வித்தியாலயம் உட்பட பல பாடசாலைகளின் இலச்சினைகளை இவர் வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
 
1960ஆம் ஆண்டு சித்திரக் கலைக்கான சாகித்திய மண்டலப் பரிசு இவருக்கு கிடைத்தது. ஆசிரிய கலாசாலை பயிற்சிக் காலத்தில் அங்கு நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
 
1989ஆம் ஆண்டு 'ஆக்கத்தொழிற்பாடு' என்ற நூல் இவரால் வெளியிடப்பட்டது. இது அக்கால சித்திரப்பாட மற்றும் கைப்பணிப் பாட ஆசிரியர்களுக்கு பெரும் வழிகாட்டியாக இருந்தது. தனது 41 வருட கால கல்விச் சேவையின் 1999 இல் இவர் ஓய்வு பெற்றார். தனது சேவைகாலத்தில் மிகக் குறைந்த அளவு லீவுகளையே இவர் பெற்றுள்ளார். 
 
மர்ஹூமா சத்தாரா பீவியைத் துணைவியாகக் கொண்டிருந்த இவருக்கு முகம்மது அரூஸ் (கிண்ணியாவின் முன்னாள் ஆரம்பக் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர்)  என்ற ஒரேயொரு மகன் இருக்கிறார். 
 
இவரது உடல், உள ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திப்போம்
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners