
கிண்ணியாவின் முதல் பெண் அதிபர் திருமதி சித்தி பரீதா சாலிஹ் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது அபூபக்கர் (மூதூர் தொகுதியின் முதல் முஸ்லிம் எம்பி)- செய்யது மர்ஜானி தம்பதிகளின் புதல்வியாக 1943.12.02 இல் திருகோணமலை சோனகவாடியில் பிறந்தார்.
திருகோணமலை புனித மரியாள் கல்லூரி, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலத்தில் கல்வி கற்றார்.
1961.01.23இல் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஆசிரியையாக நியமனம் பெற்றார். பெரியகிண்ணியாவைச் சேர்ந்த எம்.எச்.முகம்மது சாலிஹ் அவர்களை 1963ஆம் ஆண்டு திருமணம் செய்ததன் மூலம் தனது வசிப்பிடத்தை கிண்ணியாவில் நிரந்தரமாக்கிக் கொண்டார்.
அழுத்கம, பலாலி ஆகிய ஆசிரியர் கலாசாலைகளில் கற்பித்தல் பயிற்சி பெற்ற இவர் உதவி அதிபர், அதிபர் என கட்டங்கட்டமாக முன்னேறினார். கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் செல்வி வடிவேலு அதிபராக இருந்த காலத்தில் இவர் பிரதி அதிபராகப் பணியாற்றினார். அக்காலத்தில் அதிபர் வடிவேல் அவர்களுக்கு பக்கத்துணையாக இருந்து செயற்பட்டார்.
1976 முதல் 1987.09.15 இல் ஓய்வு பெறும் வரை கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
1982இல் இவருக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) கிடைத்தது. இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது பெண் கல்வி நிர்வாக சேவை அதிகாரி என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
இவரது சேவைக்காலம் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி வரலாற்றில் பொற்காலம் எனலாம். மாணவிகளின் ஒழுக்கம், பண்பாடு விடயங்களில் மிகவும் இறுக்கமாக இவர் நடந்து கொண்டதால் அப்பாடசாலை சிறந்த கட்டுக் கோப்புள்ள பாடசாலை என்ற பெயரைப் பெற்றது.
கல்விசார் விடயங்களிலும், துணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் அதிக அக்கறை கொண்ட இவர் அப்பாடசாலை மாணவிகளின் பெறுபேறுகளை உயர்த்திக் கொள்ள கடும் பிரயத்தனம் செய்தார். பல மாணவிகள் பட்டதாரிகளாக வெளிவர சிறந்த அடித்தளம் இட்டார். இவரால் உருவாக்கப்பட்ட மாணவிகளே இன்று கல்விப் புலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
உயர்தரம் வரை கற்க முடியாத மாணவிகளின் எதிர்கால நலன் கருதி தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதற்காக நெசவு பாடத்தைக் கட்டாயமாக்கி பலர் சுயதொழில் செய்ய வழிகாட்டினார்.
இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட பெண் சாரணியம், வலைப்பந்தாட்ட அணி ஆகியவற்றின் மூலம் பாடசாலைக்கு துணைப்பாடவிதானத்தில் வெற்றிகள் கிடைக்க வழிசெய்தார். பாலர் கலைவிழா, விளையாட்டுப் போட்டி, கலாசார விழா, ஆங்கில தின விழா என வருடாந்தம் புறக்கிருத்தியச் செயற்பாடுகளை நடத்தி பாடசாலைக்கும், பெற்றோருக்குமிடையே நெருக்கத்தை ஏற்படுத்தினார்.
முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத், முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் ஆகியோர் காலத்தில் தான் இவர் அதிபராகப் பணியாற்றினார். இவர்களது அனுசரணையோடு இப்பாடசாலையின் பௌதீகத் தேவைகள் பெருமளவு நிவர்த்தி செய்யப்பட்டன.
முதல் நியமனத்திலிருந்து ஓய்வு பெறும் வரை ஒரே பாடசாலையில் அதாவது கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மட்டுமே பணியாற்றி சாதனை புரிந்துள்ளார்.
ஓய்வு பெற்றாலும் இன்றும் இவரது கல்விப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவரது ஆக்கபூர்வமான நிர்வாகச் செயற்பாடுகள் பலருக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கியுள்ளன. இதற்காக இவர் இன்றும் பலரால் சிலாகித்துப் பேசப்படுகின்றார்.
முகம்மது முளவ்பர் (USA), நவ்ரா ஜெஸ்மின், சரினா பர்வின் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர். இவரது உடல் நலத்திற்கும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.
தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment