ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா அனுப்பிய விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா மட்டுமே, இதுவரை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன.
அதில், அமெரிக்கா அனுப்பிய விண்கலம் மட்டுமே, செவ்வாயின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.தற்போது அமெரிக்கா அனுப்பியுள்ள விண்கலம் , செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 'தியான்வென்1' என்ற விண்கலத்தை சீனா அனுப்பியுள்ளது.அதில் உள்ள, 'ஜூரோங்க்' என பெயரிடப்பட்டுள்ள, 'ரோவர்' எனப்படும் விண்கலம் , நேற்று(15) வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. அது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்ற சோதனையில் ஈடுபட உள்ளது.ஆறு சக்கரங்களுடன், 240 கிலோ எடையுள்ள இந்த ரோந்து வாகனத்தில், ஆறு முக்கிய அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று மாதங்கள் அது செவ்வாயின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாங்மார்ச் 5 ராக்கெட் மூலம் தியான்வென்-1 விண்கலத்தை ஏவியது. பூமியிலிருந்து 4 கோடி கிமீ தொலைவுக்கு சுமார் 7 மாதங்கள் பயணித்த இந்த விண்கலம் கடந்த பெப்ரவரியில் செவ்வாய் கோள் வட்டப்பாதைக்குள் நுழைந்தது.
இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சீன நேரப்படி நேற்று காலை 7.18 மணி அளவில் தியான்வென்-1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதனை சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் சீன விண்கலம் இது.
Comment