சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பல ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை விமர்சித்ததற்காக அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்ததாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏனைய அமைச்சர்களின் முறைப்பாடுகளை அடுத்து ஜனாதிபதி பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்ததாக அமைச்சர் ராஜபக்ச தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, அமைச்சராக இருந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னர் நன்கு அறிந்திருக்க வேண்டும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரேமஜயந்த அரசாங்கத்தின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டார் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“அவர் ஒரு மூத்த அரசியல்வாதி என்பது நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் அவருக்கு பொறுப்புகள் உள்ளன மற்றும் வரம்புகளுக்குள் செயற்பட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. அந்தக் கொள்கைகளில் குறைபாடுகள் இருந்திருந்தால், அவை எழுப்பப்பட வேண்டிய பல மன்றங்கள் உள்ளன. ஜனாதிபதி அமைச்சர்களை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. பிரேம்ஜயந்த அப்போது அரசாங்கக் கொள்கைகள் தொடர்பில் தனக்கு இருந்த பிரச்சினைகளை அல்லது கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும்.
ஒரு சிரேஷ்டராக பிரேமஜயந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
(நியூஸ் வயர்)
Comment