நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் அது. ஊட்டியை அடுத்த சின்ன குன்னூர் மலைப் பகுதியில் உள்ள பெந்தட்டி என்ற இடத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோல் உரிந்த நிலையில் வாயைப் பிளந்தபடி 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் உடல் கிடந்தது. அதன் முகத்தில் நீண்டிருந்த தந்தங்களும் அதன் பரிதாப தோற்றமும் காண்போரை கலங்க வைத்தன.
தனியார் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்குகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி அந்த யானை உயிரிழந்தது.
`அந்தச் சம்பவம் பொதுவெளியில் தெரிந்தால் ஆபத்து' எனக் கருதிய விக்னேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அஜித்குமார் ஆகியோர் தோட்டத்தில் வைத்து யானையை எரித்துள்ளனர். அப்படியும் எரிக்க முடியாததால் குழி தோண்டி அரைகுறையாக மண்ணைப் போட்டு புதைத்தனர்.
மூன்று நாள்கள் கழிந்த பிறகே யானை கொல்லப்பட்டது வெளியுலகின் கவனத்துக்குத் தெரியவந்தது. அதே இடத்தில் யானைக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. தோட்டத்து மின்வேலியில் பாய்ந்த உயர் அழுத்த மின்சாரமே உணவைத் தேடி வந்த யானைக்கு எமனாக மாறிப்போனதாக கூறப்பட்டது.
யானையை புதைக்க முயன்ற மூவர் மீது வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தாலும் ஒரு கம்பீரமான ஆண் யானையின் மரணத்தை சூழலியல் ஆர்வலர்களால் அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியவில்லை.
இதே வரிசையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட காராச்சிக்கொரையில் கொடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அங்கு வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் ராஜன் என்ற விவசாயி வாழையை பயிரிட்டுள்ளார். அவற்றைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. ராஜனின் வாழைகளைத் தேடி தோட்டத்துக்குள் நுழைய முற்பட்ட யானைக்கு உயர் அழுத்த மின்கம்பிகள் ஆபத்தை தேடிக் கொடுத்தன.
மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை வனப்பகுதியிலும் விவசாய விளைநிலங்களுக்கு யானைகள் வராமல் தடுக்கும் வகையில் வனத்துறையால் வெட்டப்பட்ட அகழியே, ஆண் யானை ஒன்றின் மரணத்துக்கு காரணமாக அமைந்தது. அந்த ஆண் யானையின் வயது 30 முதல் 35 என்பதுதான் வேதனையிலும் வேதனை.
உலக வன நிதியத்தின் (WWF) தரவுகளின்படி, உலகம் முழுவதும் 4,40,000 என்ற எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. அதில் சுமார் 15,000 யானைகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படுகின்றன. ஆசிய யானைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்துக்குள் இருந்தாலும் வேட்டை, மின்வேலி, அகழி, மோதல், விபத்து, நஞ்சு எனப் பல்வேறு காரணிகளால் யானைகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.
மேற்கண்ட 3 சம்பவங்களில் பெண் யானைகளை விட, ஆண் யானைகளே அதிகம் உயிரிழந்துள்ளன. இவை சிறு உதாரணங்கள்தான்.
``கூட்டத்தை விட்டுப் பிரிந்து புதிய வாழ்விடங்களைத் தேடி அலைவதில் ஆண் யானைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் காரணமாக அவை மரணத்தை எதிர்கொள்கின்றன," என்கிறார் இந்திய அரசின் வன உயிரின குற்றத் தடுப்புப் பிரிவின் வன ஆய்வாளர் மதிவாணன்.
வேட்டையும் மின்வேலியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES
கோப்புப்படம்
``உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய யானைகள் ஒருகாலத்தில் இரான்,இராக் முதல் சீனா வரையில் பரவியிருந்தன. அதன்பிறகு அவற்றின் எண்ணிக்கை குறைந்து தற்போது 13 நாடுகளில் மட்டுமே உள்ளன. இந்தியா, நேபாளம், இலங்கை, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அவை காணப்பட்டாலும், இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் அவை சிறிய அளவிலேயே உள்ளன. மொத்தமாகப் பார்த்தால் இந்தியாவில் 60 சதவிகித ஆசிய யானைகள் உள்ளன. அதாவது, ஆரோக்கியமான எண்ணிக்கையில் உள்ளன," என்கிறார் மதிவாணன்.
"இந்தியாவில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களால் அவை அபாயத்தில் உள்ளன. ஆப்பிரிக்காவில் ஆண் யானை, பெண் யானை என எதன் மீது தாக்குதல் நடத்தினாலும் வேட்டைக்காரர்களுக்கு தந்தம் கிடைக்கும். ஆசிய யானைகளில் ஆண் யானைகளை மட்டுமே தந்தத்துக்காக வேட்டையாட முடியும். இந்த வேட்டையின் காரணமாக யானைகள் இனப்பெருக்க சுழற்சியில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. ஆண் யானைகள் மட்டுமே தங்களது குழுவை விட்டு வெளியே வரும். முன்பெல்லாம் சாதாரண வேலிகளைத் தட்டிவிட்டு உணவை சாப்பிட்டுவிட்டு யானைகள் செல்வது வழக்கம். இப்போது பேட்டரி அல்லது நேரடி மின்சாரத்தில் வேலிகள் அமைக்கப்படுவதால் நிறைய யானைகள் உயிரிழக்கின்றன. வேட்டையால் நடக்கும் மரணத்தைப்போலவே மின்வேலியால் நடக்கும் உயிரிழப்புகளும் அதிகரித்தபடி உள்ளன," என வேதனைப்படுகிறார் மதிவாணன்.
சரியும் ஆண், பெண் பாலின விகிதம்
இதில் வேதனையான விஷயம், இந்திய அறிவியல் கழகத்தின் சூழலியல் துறை நடத்திய ஆய்வு ஒன்றில் யானைகளின் பாலின விகிதத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆண், பெண் யானை பாலின விகிதமானது சில பகுதிகளில் 1:75, 1:30:, 1:5 என்ற அளவில் இருந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கேரளாவின் பெரியார் புலிகள் காப்பகத்தில் பலவீனமான எண்ணிக்கையில் ஆண் யானைகள் இருந்துள்ளதையும் தெரிவித்துள்ளனர். தேனி, கம்பம், முதுமலை ஆகிய பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல எண்ணிக்கையில் யானைகள் இருப்பதாகவும் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலின விகிதத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வனவிலங்கு உயிரியல் பேராசிரியரும் ஆசிய யானைகள் நிபுணர் குழுவின் உறுப்பினருமான ராமகிருஷ்ணன், ``யானைகளின் பாலினத்தில் சரியான விகிதம் அமையாவிட்டால் மரபணு சிக்கல்கள் ஏற்படும். தந்தம் இல்லாத யானைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். அந்த யானைகள் கம்பீரமாக இருந்தாலும் குறைபாடாகத்தான் பார்க்கப்படும். மரபணு சரியாக இல்லாத யானைகளுக்கு பேரிடர் காலங்களில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும்," என்கிறார்.
``5 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்ற விகிதம்தான் மிகச் சரியானது. 50 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை இருந்தால் என்னவாகும்? அப்படி இருந்தால் ஒரே ஒரு மரபணு சங்கிலிதான் உருவாகும். அவ்வாறு பிறக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் குறையும். தற்போது வேட்டைத் தடுப்புக் குழுக்கள் வந்த பிறகு ஓரளவுக்கு தந்த வேட்டைகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன. பொதுவாக, ஆண் யானைகள் வயதுக்கு வந்து விட்டாலே கூட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து விடும்.
ஆண் யானைகளுக்குள் நடக்கும் மோதலில் எந்த யானை வெற்றி பெறுகிறதோ, அதனுடன்தான் பெண் யானை இணை சேர விரும்பும். தன்னுடைய குட்டி வலிமையானதாக பிறப்பதைத்தான் பெண் யானைகள் விரும்பும். அப்படி இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். தற்போது ஆசிய யானைகளின் நிலை குறித்து விரிவான ஆய்வு ஒன்று நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் அந்த அறிக்கை வெளியில் வரும்" என்கிறார் ராமகிருஷ்ணன்.
மரபணு மாற்றத்தில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம்,GETTY IMAGES
``இந்தியாவை நான்கு மண்டலங்களாக பிரித்தால் தென் மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் ஒடிஷா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளிலும் உத்தராகண்டிலும் வடகிழக்கில் மேகாலயா உள்ளிட்ட பகுதிகளிலும் யானைகள் உள்ளன. இவற்றில் தென்மண்டலத்தில் யானைகள் அதிகப்படியாக வசிக்கின்றன. குறிப்பாக, கேரளாவில் யானைகள் அதிகமாக இருப்பதால் பாலக்காட்டு கணவாயில் வலசைப் பாதையில் நகரும்போது ரயில் விபத்துகளால் யானைகள் இறக்க நேரிடுகின்றன. யானைகள் இடம்விட்டு இடம் நகர்ந்தால்தான் மரபணு மாற்றம் சரியாக நடக்கும். அப்போதுதான் ஆரோக்கியமான குட்டிகள் பிறக்கும். அதனால்தான் வலசைப் பாதைகளை இணைக்க வேண்டும் என சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்," என்கிறார் வன ஆய்வாளர் மதிவாணன்.
``ஒவ்வொரு யானைக் குழுவும் தங்களுக்கென்று வசிப்பிடத்தை வைத்துள்ளன. சில யானைகள் ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுற்றிக் கொண்டிருக்கும். சில யானைகள் இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர் வரையில் பயணிக்கும். ஆப்ரிக்க யானைகள் நான்காயிரம் சதுர கி.மீ வரையில் பயணம் செய்யும் திறன் கொண்டவை. எங்கள் ஆய்வில் யானைக் கூட்டம் ஒன்று 150 சதுர கி.மீ அளவிலேயே இருந்துள்ளதும் தெரியவந்தது. தங்களின் காலநிலையில் சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே அவை வேறு இடங்களுக்குப் பயணிக்கும். தந்தம் இல்லாத யானைகள் ஒன்று சேர்ந்து புதிய இடத்துக்குச் செல்ல முயற்சிக்கும். அவ்வாறு செல்லும்போது பல்வேறு துயரங்களைச் சந்திக்கின்றன. புதிய இடங்களுக்கான தேடலில் தங்களுக்கு ஏற்ற இடங்களைக் கண்டறிந்துவிட்டால் மற்ற யானைகளும் அங்கே வந்து சேர்ந்துவிடும்."
"குளிர்காலத்தில் மட்டும் இல்லாமல் அதற்கு விருப்பப்பட்ட காலங்களில் எல்லாம் ஆண் யானைகளும் பெண் யானைகளும் இணை சேரும். மத நீர் வெளியேறும் காலங்களில் மட்டும் மிகுந்த கோபத்தில் இருக்கும். யானைக் கூட்டத்தில் பாலின சமநிலை இருப்பது மிக முக்கியமானது. 10 ஆண் மயில்கள் நடனமாடும்போது அதில் ஒன்றைத்தான் பெண் மயில் தேர்வு செய்யும். அதே கணக்குகள்தான் யானைக்கும். காட்டில் செடிகளுக்கான விதைகளைத் தேடும்போதுகூட நல்ல விதைகளை தேடி எடுத்து நர்சரிகளை உருவாக்குவார்கள். அப்படித்தான் இதுவும்," என்கிறார் மதிவாணன்.
சுற்றுலா பெயரில் `தந்த' வணிகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES
யானைகளின் பாலின விகிதத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு தந்த வேட்டையும் மின்வேலிகளும் பிரதான காரணங்களாக உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகப்படியாக இந்த வேட்டைகள் நடப்பதால் வழக்குகளும் அதிகப்படியாகப் பதிவாகின்றன.
உள்ளூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கூரியர் சர்வீஸ் மூலமாக `கலைப் பொருள்கள்' உள்பட பல்வேறு பெயர்களில் தந்தத்தால் ஆன ஆபரணங்கள் கடத்தப்படுவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோத்தகிரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைதான நாகராஜன் என்பவர் மூலமாக வெளிநாடுகளுக்கு தந்தப் பொருள்கள் கடத்தப்பட்ட விவரங்களையும் வனத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
வெளிநாட்டு தபால் நிலையங்கள், தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனங்கள் என பலவித உக்திகளை 'தந்த' கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் பயணிகளில் சிலர் ராஜஸ்தான், டெல்லி, காசி, கேரளா ஆகிய பகுதிகளை இலக்காக வைத்து வருகின்றனர்.
அவ்வாறான பயணங்களில் ஐவரி பொருள்கள் எந்தவிதமான தரத்தில் இருக்க வேண்டும் என ஆர்டர் செய்து விட்டு முழுப் பணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்களுக்குச் சென்று சேரும் முகவரிகள் பெரும்பாலும் சம்பந்தம் இல்லாதவையாக உள்ளன.
கேரளாவில் இருந்தும் போலி அனுப்புநர் முகவரிகளில் தந்தப் பொருள்கள் பார்சலாகின்றன. கூரியர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் பொருள்களை கூடுதல் கவனம் எடுத்து சோதனை செய்ய வேண்டும் எனவும் வனஉயிரின குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
காரணம், வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பலரும் பாண்டிச்சேரி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளை மையமாக வைத்துச் செயல்படும் சில கடைகளைத் தெரிவித்துள்ளனர். அந்தக் கடைகள் மூலமாக கலைப் பொருள் என்ற பெயரில் தந்தங்கள் கடல் கடந்து பறக்கின்றன.
வனத்துறை அதிகாரிகளுக்கு எப்படி தொடர்பு?

பட மூலாதாரம்,GETTY IMAGES
கோப்புப்படம்
வேட்டைக்காரர்களை கேரளா, கொல்கத்தா, டெல்லி என பிரித்துப் பார்த்தாலும் சர்வதேச அளவில் இவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவர்களாக உள்ளனர். இந்தியா முழுவதும் ஒரே நெட்வொர்க்காக இயங்குகின்றனர். இவர்கள் பல்வேறு பகுதிகளில் பிரிந்து செயல்படுகின்றனர். இதை ஒரு தொழிலாகச் செய்து வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரம், வன உயிரின பொருள்களின் விற்பனை குறித்த ரகசியத் தகவல் கிடைத்தாலும் அதனை கடைசி நிமிடம் வரையில் வனஉயிரின குற்றத் தடுப்பு அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. யானை தந்தம் வைத்திருப்பதாகத் தகவல் வந்தால், ஒருவர் ஆமை வைத்துள்ளதாகக் கூறி குழுவை எச்சரிக்கை செய்கின்றனர். அவை பிடிபட்ட பிறகே தந்தம் குறித்த தகவல் மற்றவர்களுக்குத் தெரிகிறது. அதேபோல், தஞ்சாவூரில் ஒருவர் மான் கொம்பு வைத்துள்ளதாகக் கூறிவிட்டு ரெய்டு நடத்தியுள்ளனர். அங்கு 400 பச்சைக் கிளிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
`எந்த ஊழியர் யாருடன் தொடர்பில் இருக்கிறார்?' என்பதை அறிவது கடினம் என்பதே இதற்குக் காரணம்.
இதற்கு முன்னோட்டமாக பல தோல்விகளை வனஉயிரின குற்றத் தடுப்பு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
மைசூரு உள்ளிட்ட சில பகுதிகளில் சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்னரே குற்றவாளிகளுக்குத் தகவல் சென்றதும் நடந்துள்ளது. வனத்தையும் அதன் உயிரினங்களையும் பாதுகாப்பதில் பெரும்பாலான வனத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும் சிலர் வேட்டைக்காரர்களுக்கு உறுதுணையாக இருப்பதும் தொடர்ந்து நடந்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
`பாசமலர்' யானைகள்

பட மூலாதாரம்,SANGEETHA IYER
"லக்ஷ்மி" யானையுடன் சங்கீதா ஐயர்
`` காடுகள் வளமாக இருப்பதற்கும் விதைப் பரவலுக்கும் யானைகள் முக்கிய காரணிகளாக உள்ளன. கீரி உள்ளிட்ட சிறிய விலங்குகளுக்கு யானையின் சாணம் உணவாக உள்ளது. சாணத்தில் உள்ள விதைகளைப் பறவைகள் எடுத்துச் சாப்பிடும். யானையின் செரிமான உறுப்புகள் மிகப் பலவீனமாக உள்ளதால் 100 சதவிகிதத்தில் 20 சதவிகிதம்தான் செரிக்கும். அவைகள் 16 முதல் 20 மணிநேரம் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். அதனால் சாப்பிடுவது பெரும்பாலாலும் செரிக்காமல் வெளியில் வந்துவிடும்.
யானைகள் பொதுவாக, 15 வருடங்களுக்கு மேல்தான் இளம் பருவத்துக்கு வரும். 16 வயதில் கர்ப்பம் தரித்து விட்டால் 2 வருட காலம் அதன் கர்ப்ப காலங்கள் ஆகும். குட்டி ஒன்றை ஈன்றுவிட்டால் ஒரு வருடம் வரையில் எந்த உறவிலும் அவை இருக்காது. அந்தக் குட்டியை மட்டுமே பாதுகாத்து வளர்க்கும். அப்படிப் பார்த்தால் 3 வருட இடைவெளியில்தான் நமக்கு ஒரு குட்டியே கிடைக்கிறது. சில யானைகள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கூட குட்டியை ஈனும். அந்தக் குட்டிகள் 2 ஆண்டுகள் வரையில் பால் குடிக்கும்.
எப்போதும் குடும்பம் சகிதமாக அவை கூட்டமாக இருக்கும். நம்மைப் போலவே அதற்கும் உறவு முறைகள் உள்ளன. ஒரு யானை இறந்துவிட்டால் 50, 60 யானைகள் கூட்டமாக வந்து பார்த்து தடவிவிட்டுச் செல்லும். சில யானைகள் இறந்து போன யானைகளின் எலும்புகளைக்கூட தூக்கிக் கொண்டு சுற்றும். ஒவ்வொன்றுக்கும் இடையில் அவ்வளவு பிணைப்புகள் இருக்கும்.
குட்டி பிறந்தாலும் அவை கூட்டமாக வந்து பார்க்கும். மரத்தில் ஏறி நின்று பார்த்தால் யானைகள் குளிப்பது, படுத்திருப்பது போன்றவை காணக் கிடைக்காத காட்சிகள். ஒரு சமூகமாக வாழும் அவ்வளவு பெரிய உருவம், 'வேட்டை' என்ற பெயரிலும் 'மின்வேலி' என்ற பெயரிலும் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். யானைகள் தங்களுக்காக அல்ல, மொத்த காட்டின் வளத்துக்கே சாட்சியாக உள்ளன," என்கிறார் இந்திய வனஉயிரின குற்றத் தடுப்புப் பிரிவின் வன ஆய்வாளர் மதிவாணன்.
`வனம் ஜீவனானு, ஜீவிதமானு' - கேரள வனத்துறையின் மந்திரமாக இந்த வார்த்தைகள் உள்ளன. வனம் உயிர்ப்போடு இருப்பதை உறுதிப்படுத்துவதே ஜீவிதத்துக்கான அடிப்படை என்பதை இதைவிட வேறு எந்த வார்த்தைகளில் சொல்வது!
Comment